NAGARAJI

உணவுப்பாதையிலும், பெருங்குடலிலும் புற்றுநோய் வராமல் தடுக்கும் சக்திபடைத்தவை பசலைக்கீரையும், பீட்ரூட் கீரையும்! கீரைகளில் பீட்டாகரோட்டீன் என்னும் நோய் நச்சுமுறிவு மருந்து இருக்கிறது. இவைதாம் ஆரோக்கியமான திசுக்களைப் பாதுகாத்து மரபணுக்கள் கெட்டுப் போகாமல் பாதுகாக்கின்றன.

ஆனால், பசலையிலும், பீட்ரூட் கீரையிலும் இவற்றுடன் லுட்டைன், ஜியாக்ஸ்ஆன்த்தின் என்னும் இரு அரிய சத்துகள் உள்ளன. இவை கண்களின் பார்வைத் திறனை கூர்மைப்படுத்தும் என்பது பலர் அறிந்தது. இத்துடன் பீட்டா கரோட்டீனைவிட ஐந்துமடங்கு அதிகமாக இந்த இரு சத்துகளும் இரத்தத்தில் உறிஞ்சப்படுகின்றன.

யுனிவர்சிட்டி ஆப் உட்டா (UTAH) மெடிகல் பள்ளி ஆய்வாளர்கள் லுட்டைன் சத்து நிரம்பிய உணவுகளைச் தாராளமாகச் சாப்பிட்டு வருகிறவர்களிடம் பெருங்குடல்புற்றுநோய் வரும் அபாயம் மிகவும் குறைவாக இருப்பதைக் கண்டுபிடித்தனர். இதே போல ஜியாக்ஸ்ஆன்த்தின் சத்துள்ள உணவுகளை ஏராளமாகச் சாப்பிட்டு வரும் மனிதர்களின் உணவுப்பாதையில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

குழந்தை பிறக்கும்போதே ஊனம் வேறு பிறவிக்குறைபாடு என எதுவும் இன்றி ஆரோக்கியமாகப் பிறக்க ஃபோலிக் அமிலம் தாராளமாக உள்ள உணவுகள் தேவை.

தற்போது ஃபோலிக் அமிலம் புற்றுநோயையும் குணப்படுத்த வல்லவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

லெட்டூஸ் கீரையிலும் அமராந்த் என்ற வாடாமல்லிகை கீரை (பசுமையான இலைகள் மட்டும் முற்றியது அல்ல)யிலும் தாராளமாக உள்ள ஃபோலிக் அமிலம் நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுப்பதை டச்சுப் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது. ஹார்வார்டு பல்கலைக்கழகமே இந்த ஃபோலிக் அமிலம் பெருங்குடலில் புற்றுநோய் தாக்காமல் பாதுகாக்கிறது என்பதைக் கண்டுபிடித்துள்ளது. குறைந்தபட்சம் லெட்டூஸ் கீரையையாவது பயன்படுத்துங்கள்.

பெருங்குடல் புற்றுநோய் தாக்காமல் பாதுகாப்பதில் கால்சியம் என்ற தாதுஉப்பின் பங்கு அதிகம் என்று விஸ்கான்சின் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது. காலிஃபிளவர், டர்னிப் கீரை போன்றவற்றை அடிக்கடி உண்பதால் கால்சியம் நன்கு கிடைப்பதுடன் எலும்பு மண்டலம் உறுதியாகிறது. இத்துடன் புற்றுநோய் தாக்காமல் பெருங்குடல் ஆரோக்கியமாக இருக்கிறது. தங்கள் உணவில் கால்சியம் சத்து குறைவாக இருந்தவர்களிடம் பெருங்குடலில் புற்றுநோய் தாக்குவதற்கான அறிகுறிகள் இருந்ததை விஸ்கான்சின் பல்கலைக்ழகம் கண்டுபிடித்தது. காலிஃபிளவரைப்போல முட்டைக்கோஸும் கீரை வகையைச் சேர்ந்ததே. புற்றுநோய்க்கழலைகள் வளராமல் அவற்றைத் தடுத்து அழிப்பதில் முட்டைக்கோஸ் முதலிடத்தில் இருக்கிறது.

இன்டோல்ஸ், ஐசோதியோசைட்ஸ் என்ற இரு பொருள்கள் கோசுக்கீரைகளிலும், முட்டைக்கோஸிலும், தாராளமாக உள்ளன. இன்டோல்ஸ், பெண்களுக்கு மார்பகத்தில் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. அங்கே புற்றுநோய்க் கழலைகள் இருந்தால் அவற்றை உடைத்து நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.

ஐசோதியோசைட்ஸ், ஆண்களுக்கு இதே வகையில் செயல்பட்டு புற்றுநோய்க்கழலைகளை உடைத்து நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.

எனவே, மற்ற கீரைகளை பயன்படுத்துவதுடன் மேற்கண்ட ஏழுவகைக் கீரையையும் அவ்வப்போது தவறவிடாது உணவில் சேர்த்து வாருங்கள். முடி கொட்டுவது, இரத்தசோகை போன்றவற்றையும் கீரைகளில் தாராளமாக உள்ள இரும்புச்சத்து குணப்படுத்துகிறது.

கீரையை அதிக அளவு சாப்பிட்டால் சிறுநீரகங்களில் கற்கள் உருவாக வாய்ப்பு உண்டு. எனவே, வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் மட்டுமே அளவுடன், பருப்பும் சேர்த்து சமைத்துச் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியுடன் ஆரோக்கியமாக வாழலாம்.

ஹார்வார்டு பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் தினமும் ஐந்து வேளை வீதம் பதினான்கு நாள்கள் வெறும் தேநீர் (பால் இன்றி) அருந்தி வந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி நான்கு மடங்கு அதிகரித்து விடும் என்று கண்டுபிடித்துள்ளனர்.

காரணம் என்ன? தேயிலையின் சாற்றில் தியானைன், காட்சின்ஸ், ஈஜிசிஜி என்ற மூன்று நோய் நச்சு முறிவு மருந்துகள் உள்ளன. இவை மிகவும் சக்தி வாய்ந்தவை.

தேநீரை மூன்று வேளைகளுக்கு மேல் அருந்தினால் இரத்தத்தில் உள்ள இரும்புச் சத்து குறையவும், நாக்கு வறட்சி அதிகரிக்கவும் உடனடியாக வாய்ப்பு அதிகரிக்கிறது.

நோய் எதிர்ப்புச் சக்திக்காக மருந்துபோல தேநீரை அளவுடன் அருந்தினால் போதும். கூடவே இரும்புச்சத்து, வைட்டமின் சி நிரம்பிய உணவுகளையும் தாராளமாகச் சேர்த்து வருவது மிகவும் முக்கியம்.

தினமும் 5 வேளை தேநீர் என்பவர்கள் மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர் ஆகியோரின் ஆலோசனைப்படி இரண்டு வாரங்கள் தேநீர் அருந்தி பூரண உடல் நலம் பெற வேண்டும்.

கவர்ச்சியான தோற்றத்திற்கு...

எதிர்ப்புச் சக்தியுடன் முழு ஆரோக்கியமாகவும், கவர்ச்சியுடனும் திகழ விரும்பினால் பழங்கள், காய்கறிகள் நன்கு சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் எந்த வயது, ஆண், பெண் என்றாலும் இரண்டு வேளை பழங்கள் காய்கறி சாலட்டுகள் உணவில் சேரட்டும்.

மாதுளை, திராட்சை, ஆரஞ்சு, கொய்யா, கத்தரிக்காய், பாகற்காய், கோவைக்காய், சுண்டைக்காய், வெண்டைக்காய், சுரைக்காய், தக்காளி போன்ற முக்கியமான பழங்கள், காய்கறிகள் கவர்ச்சியான தோற்றம் தரும்.

ஏனென்றால், இவற்றில் உள்ள கரோட்டீனாய்டு என்ற நிறமி தோலின் நிறத்தை வெளிர் மஞ்சளாக மாற்றிவிடுகிறது. இத்தகைய தோல் கொண்டவர்கள் முழு ஆரோக்கியத்துடன்,கவர்ச்சிகரமான தோற்றத்துடனும் காணப்படுவதை இங்கிலாந்தின் பிரிஸ்டல் மற்றும் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது.

கரோட்டீனாய்டு நிறமி இரத்தம் தோலில் சேர்ந்திருப்பவர்களுக்கு நோய் தாக்குவது சிரமம். இத்துடன் தோலின் நிறத்தையும் மெருகேற்றி கவர்ச்சியாக மாற்றிவிடுகிறது.

தோலின் நிறத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் தொடர்பு உண்டு என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டு விட்டது.

கொழுத்த சரீரத்துடன் இருப்பவர்கள் கவர்ச்சியாக முதலில் மாற நம்பிக்கை தேவை. இதற்காக தினமும் இரண்டு காரட்டுகளை நன்கு கழுவி தோல் சீவாமல் மிக்ஸி மூலம் மைய அரைக்கவும். இதை இரண்டு டம்ளர் மோரில் கரைத்து காலையில் அருந்தி விடவும். வேறு எதுவும் சாப்பிட வேண்டாம். அப்படியும் பசித்தால் மூன்று தக்காளிப்பழங்கள் மட்டும் சாப்பிடவும். மதியம், இரவு, உங்கள் விருப்பப்படி சாப்பிடலாம்.

காரட் சாறு + மோர் உணவு மருத்துவத்தை பத்து நாள்கள் வரை தொடரவும். இதன் பிறகு வேண்டாம். காரணம், இந்தச் சாறில் உள்ள கரோட்டீனாய்டும் கால்சியமும் உடலில் உள்ள அதிகக் கொழுப்பைக் கரைத்து நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரித்து இருக்கும்.

உடலும் கலகலப்பாக இருக்கும். உள்ளமும் துடிப்புடன் இருக்கும். இது அப்படியே நீடிக்க காரட், தக்காளி போன்றவற்றை சாலட்டாகவும், சீசனில் கிடைக்கும் பழங்கைளயும் பிற உணவுகளுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் போதும்.

எடை அதிகரிப்பும் களைப்பும் இருப்பது உறுதி செய்யப்பட்டால் காரட் + மோர் சாறு அருந்தலாம். மற்ற உணவுகளைக் குறைத்து பழங்களை அதிகரித்துக் கொள்ளலாம்.

காரட்டின் நடுவே மஞ்சளாகத் தெரிவது தான் கரோட்டீனாய்டு என்ற நிறமி. இதுதான் வைட்டமின் `ஏ'யாக மாறி நோய் நச்சு முறிவு மருந்தாகச் செயல்பட்டு முழு ஆரோக்கியத்தைத் தொடர்ந்து வழங்குகிறது. பழங்கள், காய்கறிகள் தாராளமாகச் சேர்த்து வந்தால் கவர்ச்சியான தோற்றமும் உறுதியாக உண்டு.

01.12.09 கவர் ஸ்டோரி
`நான் சுத்த சைவமாக்கும்...பால் மட்டும் குடிப்பேன்'
`டீ, காபி குடிக்கிறத நிறுத்தி இரண்டு வருஷமாச்சு...பால் மட்டும்தான் குடிப்பேன்'

இந்த வார்த்தைகளை நண்பர்கள், உறவினர்கள், அலுவலக சகாக்கள் என்று தினந்தோறும் யாரிடமிருந்தாவது கேட்டுக்கொண்டுதானிருக்கிறோம்.

மனிதர்களின் அன்றாட உணவில் பசும்பால் தவிர்க்கவே முடியாத அங்கமாகிவிட்டது. ஆனால் சமீபகாலமாக பசும்பால் பயன்பாட்டைத் தவிர்க்கக்கோரி சுற்றுச்சூழல்வாதிகள் பரவலாக பேச ஆரம்பித்திருக்கிறார்கள். பால்பண்ணைகளால் காடுகள் அழிப்பு, கார்பன்டைஆக்ஸைடு அதிகரிப்பு என சுற்றுச்சூழலுக்கு தீங்கு நேருவதால் பசும்பால் அருந்துவதையும் மாடுகளின் மாமிசத்தை உண்பதையும் தவிர்க்க வேண்டுமென்று அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தீவிரமான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

சுற்றுச்சூழலை காரணங்காட்டி அடிக்கடி ஏதாவது அதிர்ச்சி அறிவிப்புகளை விடுப்பது அமெரிக்க அறிஞர்களின் வழக்கம்தான். ஆனால் உடல்நலனைக்குறித்தும் இப்போது பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

மனித உடல் தாய்ப்பாலை தவிர்த்து வேறெந்த உயிரினங்களின் பாலையும் அருந்துவதற்கு ஏற்றவகையில் அமையவில்லை. தாய்ப்பாலையும் குழந்தைப்பருவத்தில் மட்டுமே மனித உடல் ஏற்றுக்கொள்ளும் என்பது அந்த அறிஞர்களின் வாதம்.

எனவே பசும்பாலை அல்லது அதிலிருந்து தயாரிக்கப்படும் பாலாடைக்கட்டி, வெண்ணெய், நெய், ஐஸ் க்ரீம் என்று எந்தப்பொருளை உண்பதாலும் உடல்நலனில் பெரிய மாறுதல்கள் ஏதும் ஏற்படப்போவதில்லை என்றும் சொல்கிறார்கள்.

உடல் எடையைக் குறைக்க விரும்பும் அமெரிக்கர்கள் உணவிற்குப் பதிலாக பாலருந்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பாலருந்துவதே உடலில் கொழுப்பு அதிகமாகவும் காரணமாக இருக்கிறது. மேலும் வாயுக்கோளாறுகள், வயிற்றுவலி உள்ளிட்ட பல பிரச்சனைகளும் வருகிறது என்று ஹார்வர்ட் பொது சுகாதார பயிற்றகத்தின் ஆய்வொன்று கூறுகிறது.

மனிதர்களுக்குப் போதுமான கால்சியம் அவர்கள் உண்ணும் தாவர உணவிலேயே கிடைக்கிறது. பாலில் இருக்கும் கால்சியத்தின் அளவு அதைவிடவும் குறைந்த அளவுதான். பிராணிகளிலிருந்து பெறப்படும் பால்போன்ற உணவுவகைகள், ரத்தத்தால் உட்செரிக்கப்படுவதில் சிக்கலை ஏற்படுத்துகின்றன என்கின்றன வேறு சில ஆய்வுகள்.

இதற்கிடையே,பண்ணைமாடுகளின் ஹார்மோன்கள் உயிர்தொழில்-நுட்பத்தைச் சார்ந்தது என்ற பயம் வேறு.

மொத்தத்தில் பசும்பால் மனிதனுக்கு போதுமானதும் அல்ல. பொருத்தமானதும் அல்ல.

அப்படியென்றால் காபி, டீயை தவிர்ப்பதைப்போல பாலருந்தும் பழக்கத்தையும் தவிர்க்கலாம். சுற்றுச்சூழலையும் பாதுகாத்தமாதிரி இருக்கும்.

எல்லாம் சரி. இது நடைமுறைக்கு சாத்தியமா?

Avoid Ulcer...

01.12.09 மற்றவை
1. குடல் புண்ணிற்கு மூலகாரணமான மலச்சிக்கலை விரட்ட காலையில் எழுந்தவுடன் 3 முதல் 4 டம்ளர் வரை தண்ணீர் சாப்பிட வேண்டும். நொந்து போன வயிறும் குடலும் தெம்பு பெறும். மிகக் கடினமான மலச்சிக்கலாக இருந்தால் அஹிம்சை எனிமா கொடுக்கலாம். இரவில் ஒரு டீஸ்பூன் திரிபலா சூரணம் சாப்பிடலாம். இரவில் திராட்சை, வாழைப்பழம், பப்பாளி போன்ற பழங்கள் சாப்பிடலாம். மேலும் மலச்சிக்கல் விலகும் முறைகளை ``நோய் தீர்க்க எனிமா''. - ``மலச்சிக்கலுக்கு மருந்து'' என்ற புத்தகங்கள் மூலம் அறியவும். ஒரு சில எளிய ஆசனங்கள் செய்யலாம்.

2. காலையில் சூடான காபி, டீக்கு பதில் ஏதேனும் பச்சை கீரைச் சாறுகள், வெள்ளைச் சீனி சேர்க்காத பழச்சாறு அல்லது உயிரூட்டிய தானியச்சாறு (முளைக்க வைத்து) இவற்றில் ஒன்றை சாப்பிட்டு உடல் நலம் பெறலாம். மழைக்காலம் தவிர பிற காலங்களில் சூடான பானங்களைத் தவிர்க்கவும்.

3. சமைத்த உணவுகள் எல்லாம் அமில உணவுகள், Acid Food கார்பன்-டை-ஆக்ஸைடு உருவாக்கும் உணவுகள். புளிக்கக் கூடிய உணவுகள் உடலுக்கு கெடுதல் தரக்கூடியவை. எனவே இட்லி, தோசை, பூரி, புரோட்டா, புலால் உணவுகள் போன்ற உணவுகளைக் குறைத்து, சாப்பிடும் முன் கனிந்த பழங்களும், சமைக்காத காய்கறிகளும் சாப்பிட்டால் குடல் புண் அதி விரைவில் குணம் அடையும். இதில் மாயம் ஒன்றும் இல்லை.

4. வயிற்றுப்புண், குடல் புண்ணை குணப்படுத்தும் அற்புத உணவுகள்.

உணவு மாற்றம் உடனடி தேவை. கார உணவுகள், ஆக்ஸிஜன் தரும் உணவுகள், அற்புத உணவுகள் (Alkanity) மணத்தக்காளி கீரை, வெந்தயக்கீரை, முருங்கைக் கீரை, வெண்பூசணிச்சாறு, சோற்றுக் கற்றாழை, நெல்லி, வாழைத் தண்டு, கோஸ், காரட், அறுகம்புல் சாறு, பசுங் காய்கறி கலவை, வாழைப் பழம், வெள்ளரி, திராட்சை, ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யா, சீத்தாப் பழம், பீர்க்கை, புடலை போன்ற சஞ்சீவி உணவுகளை சாப்பாட்டில் அதிகம் சேர்த்தால் ஒரு வாரத்தில் மிகப் பெரிய மாறுதலை அடையலாம். கீரைகளை பச்சையாக சாறு எடுத்து சாப்பிட இயலாதவர்கள் வெந்தயத்தை முளைகட்டி காய வைத்த பொடி, காய வைத்த முருங்கைப் பொடி, அறுகம்புல் பொடி போன்றவைகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் காபி, டீக்கு பதில் முளை கட்டிய தானியங்களை காய வைத்து சத்துமாவு ரெடி செய்து கஞ்சி, தோசை செய்து சாப்பிடலாம். பிற இயற்கை நல உணவு வகைகள் பற்றி அறிய ``பால் மனிதனின் பரிபூரண உணவா?'' மற்றும், ஆரோக்கியம் தரும் அற்புத உணவுகள் மூலம் அறியலாம். ஒருநாள் உணவுத் திட்ட விவரம் பின் பகுதியில் தரப்படுகிறது.

5. பிற மருத்துவத் துறையில் நேரம் தவறாமல் சாப்பிடச் சொல்லி வற்புறுத்தப்படுகிறது. ஆனால், நிரந்தர உடல்நலம் நாடுபவர்கள் நன்றாகப் பசித்த பின்பு தான் எந்த உணவாக இருந்தாலும் சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். அதுவரை அவ்வப்போது தண்ணீர் மட்டும் அருந்த வேண்டும்.

6. குடல் புண், வயிற்றுப்புண் வலியின் கடுமை குறையும்வரை திட உணவுகள் தவிர்த்து திரவ உணவுகளான பழச்சாறுகள், காய்கறிச் சாறுகள் போன்ற வகை உணவுகள் அதிகம் சேர்க்க வேண்டும். கண்டிப்பாக வெள்ளைச் சீனி தவிர்க்க வேண்டும். தேன் அல்லது வெல்லம் தேவைப்படின் சேர்க்கலாம்.

7. கூடிய வரை இரவு உணவை இரவு 7 மணி அளவில் சாப்பிட்டு விட வேண்டும்.

8. எளிய யோகாசனப் பயிற்சிகள், பவன முக்தாசனம், பத்மாசனம், வஜ்ராசனம், நாடிசுத்தி போன்ற பயிற்சிகளை யோக ஆசிரியர் அல்லது யோகாசனப் புத்தகம் மூலம் தெரிந்து தினமும் சில நிமிடங்கள் செய்து வர குடல் புண் விரைவில் சரியாகும்.

9. வயிற்றுப்புண், குடல் புண் முற்றிய நிலையில் தேங்காய் போன்றஇயற்கை உணவுகளை இயற்கை மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே சாப்பிடலாம்.

10. கூடிய வரை சாப்பிட்ட பின்பு குறைந்தது பதினைந்து நிமிடங்கள் கழித்தே தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

11. சாப்பிட்ட உடன் மூளை சம்பந்தப்பட்ட வேலை அல்லது கடின உடல் உழைப்பு செய்வதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். உழைப்பும் செரித்தல் வேலையும் ஒரே நேரத்தில் நடக்க இயலாது.

12. சாப்பிட வேண்டிய உணவுகளை அமைதியாக அமர்ந்து நன்றாக அவசரம் இல்லாமல் மென்று உமிழ்நீர் சேர்த்து சாப்பிட வேண்டும். உமிழ்நீர் சேர்ந்த உணவுகள் இரைப்பை, குடலுக்கு நன்மை தருகின்றன. நோய்களில் இருந்து பாதுகாக்கின்றன.

13. கோபமாக இருக்கும்போதும், மனம் அமைதியற்று இருக்கும் போதும் உணவு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். தண்ணீர் சாப்பிடலாம். சாந்தி ஆசனம் செய்யலாம். கோபம், குடல்புண், வயிற்றுப் புண்களை அதிகரிக்கும் அமிலத்தைச் சுரக்கச் செய்கிறது. மணத்தக்காளி, வெண்பூசணி கூட்டணி இரைப்பைப் புண்ணை இல்லாமல் செய்திடும்.

குடல் புண் குணம் பெற ஒரு நாள் மாதிரி உணவுத் திட்டம்

கண்டிப்பாக கடல் உப்பு, வெள்ளைச் சீனி, மிளகாய், எண்ணெயில் பொறித்த பண்டங்கள் தவிர்க்க வேண்டும்.

காலை 5.30 மணி:

எழுந்தவுடன் மூன்று முதல் ஆறு டம்ளர் நீர் வரை அருந்த வேண்டும். காலையில் குடிக்கும் நீர், வயிற்றுப் புண், குடல் புண்ணை சரி செய்கிறது. பின் இயன்றால் பல் துலக்கும் சமயம் வாந்தி எடுக்கவும். கெட்ட நீர், தேவையற்ற அமிலங்கள் வெளியேறும்.

காலை 6.30 மணி:

அறுகம்புல் சாறு, மணத்தக்காளிக் கீரை சாறு, நெல்லிச்சாறு, சாம்பல் பூசணிச் சாறு, வெந்தயக் கீரைச்சாறு இவைகளில் ஏதேனும் ஒன்று அல்லது அறுகம்புல் பொடி, உயிரூட்டிய வெந்தயப்பொடி இவைகளில் ஏதேனும் ஒன்று. சாறு எடுப்பதாக இருந்தால் ஒரு கைப்பிடி கீரையை எடுத்து கழுவி மிக்ஸியில் 200 மில்லி நீர் விட்டு அரைத்து வடிகட்டவும். தேவையெனில் இனிப்பும் கலக்கலாம். சப்பிச் சப்பி சாப்பிடவும், கலோரி சக்தி 30 வரை கிட்டும்.

முளைகட்டிய வெந்தப் பொடி தயார் செய்ய வெந்தயத்தை 8 மணி நேரம் ஊற வைத்து 8 மணி நேரம் துணியில் கட்டினால் முளை வரும். வெயிலில் 5 கிராம் காய வைத்து மிக்ஸியில் பொடியாக்கி வைத்துக்கொண்டு 1 ஸ்பூன் நீரில் கலந்து சாப்பிடவும். நைந்து போன, பலம் இழந்த வயிறு, குடல் புண் மற்றும் வாய்ப்புண்ணை ஆற்றும் சஞ்சீவி உணவு, தினமும் சாப்பிடலாம். சாப்பிடும் முன்பு ஒரு டீஸ்பூன் தொடர்ந்து சாப்பிட ஒரு வாரத்தில் குடல்புண் சரியாகும்.

காலை 9.00 மணி:

வாழைப்பழம் 2, திராட்சை 50 கிராம், ஆரஞ்சு 1, பப்பாளி இரு துண்டுகள் அல்லது தேவையான அளவுகள் சாப்பிடலாம். வெள்ளரி, முட்டைக்கோஸ், காரட் பச்சையாக தேவையான அளவு சாப்பிடலாம். முளை தானியங்களான கம்பு, கேழ்வரகு, கோதுமை, பச்சைப்பயறு சேர்க்கலாம். கலோரி சக்தி 200 வரை கிட்டும்.

மதியம் 1.00 மணி:

காரட், கோஸ், தக்காளி, புடலை, பீர்க்கை போன்ற காய்கறிகள் கலந்த பசுங்கலவை 200 கிராம் ஆப்பிள் 1 துண்டு, மாதுளை 50 கிராம், தர்பூசணி சிறிது வெள்ளரி 2, சமைத்த காய்கறிகள் 200 கிராம், ஊற வைத்த கார் அவல் 150 கிராம்.

இவைகளில் சில மற்றும் தேவையான அளவுகள் சாப்பிடலாம். முளை தானியங்கள் 50 கிராம் முதல் 100 கிராம் வரை சாப்பிடலாம். அரைப்பதத்தில் உள்ள தேங்காய், வழுக்கைகள் சேர்க்கலாம். கலோரி சக்தி 500 வரை கிட்டும்.

பசுங்காய்கறி கலவை செய்யும் முறை (1 நபருக்கு)

காரட் 50 கிராம், தக்காளி 1, பல்லாரி வெங்காயம் 1, கோஸ், பீர்க்கை, புடலை, தர்பூசணி இவைகளில் ஒன்றோ, எல்லாம் சேர்ந்தோ 50 கிராம், தேங்காய்த் துருவல் 50 கிராம், எலுமிச்சை சாறு சிறிது, வெல்லத்தூள் சிறிது, மல்லி, கறிவேப்பிலை சிறிது, காய்கறிகளை நன்றாகக் கழுவி தேங்காய்த் துருவல் போல் செய்து எலுமிச்சை சாறு, வெல்லத்தூள், தேங்காய்த் துருவல் கலந்து சாப்பிட்டால் எவ்வித குடல் புண்ணும் மூன்றே நாளில் வலி குறைந்து நிவாரணம் கிடைக்கும்.

ஜெலுசில் போன்ற ஆங்கில மருந்துகள் தேவைப்படாது. கவலை தரும் நோய்களை விரட்டும் அற்புத மருந்து. வயதானவர்களும் பல் இல்லாதவர்களும் மிக்ஸியில் அரைத்துச் சாப்பிடலாம். இனிப்புக் கலந்தும் சாப்பிடலாம்.

மாலை 4.00 மணி:

தேன் கலந்த நீர், காய்கறி சூப், நெல்லி வத்தல், மணத்தக்காளி சூப், மூலிகை டீ, காரட் கீர், காயவைத்த முருங்கைப் பொடி, உயிரூட்டிய (முளைகட்டிய) தானிய சத்துமாவு இவைகளில் ஏதேனும் ஒன்று. முருங்கைக் கீரையை சமைத்து உண்பதால் அமில உணவாகி, கழிவு உணவாகி விடுகிறது. எனவே கீரையைப் பறித்து உலர்த்தி பொடி செய்து வைத்து தினமும் 1 ஸ்பூன் சாப்பிட்டால் குடல் புண் தீரும். இது ஒரு சஞ்சீவி கீரையாகும். கீரைகளில் மனிதன் சாப்பிடக் கூடிய கீரை முருங்கைக் கீரை ஒன்றே. அதையும் சமைக்காமல் பொடி செய்து சாப்பிடும்போது அற்புத ஆற்றல் தருகிறது. சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம். கலோரி சக்தி 50 வரை கிட்டும்.

`வெந்து கெட்டது முருங்கை'

காரட் கீர் செய்யும் முறை


காரட் துருவலை மிக்ஸி அல்லது கிரைண்டரில் ஆட்டி சாறு எடுத்து அத்துடன் தேங்காய்ப் பால் சேர்க்கவும், சுவைக்கு தேன் அல்லது வெல்லம் சேர்க்கவும். இது டிபனுக்குப் பதில் மாற்று உணவு. சத்து தரும். உடனடி சக்தியும் தெம்பும் தரும். குழந்தைகள் மிகவும் விரும்பி பிரியமாக சாப்பிடுவர். காரட் கீர் கேட்டுப் பருகுவோம்.

தேங்காய்ப் பாலுக்குப் பதில் முளை தானியப்பால் சேர்க்கலாம். இதேபோல் பேரீச்சை கீர், கறிவேப்பிலை கீர், கொத்தமல்லி கீர் செய்து சாப்பிடலாம். கலோரி சக்தி 50 வரை கிட்டும்.

இரவு 7.00 மணி:

சாப்பிடும் முன்பு ஏதேனும் கீரைப் பொடிகள். மேலும் வாழைப்பழம் 2, உயிரூட்டிய தானியங்கள் (பாசிப்பயறு) 30 கிராம், கொய்யா 1, காரட் 50 கிராம் போன்ற தேவையான அளவு, முளை தானியங்கள் 50 கிராம் முதல் 100 கிராம் சேர்க்கலாம். கலோரி சக்தி 300 வரை கிட்டும். அவல் உணவுகள் 100 கிராம் வரை சேர்க்கலாம்.

முளைகட்டிய உயிரூட்டிய (Sprouts) தானியங்கள் செய்முறை:

ஒரு கைப்பிடி பாசிப்பயறு 8 மணி நேரம் ஊற வைத்து 8 மணி நேரம் துணியில் கட்டினால் முளை கிளம்பி வரும். நன்றாகக் கழுவி தேங்காய் துருவல், வெல்லத்தூள் கலந்து சாப்பிடலாம். இதுபோல் கேழ்வரகு, கம்பு, கோதுமை, கொண்டைக்கடலை போன்ற தானியங்கள் சாப்பிடலாம். புண்ணாகிப் போன குடலையும், மனதையும் விரைவில் குணமாக்கக் கூடிய சக்தி உயிரூட்டிய (முளைக்க வைத்த) தானியங்களுக்கு உண்டு. சாப்பிட்டு பலனைத் தெரிவியுங்கள். உப்பால் உடைந்து சிதைந்து போன குடலை சரி செய்வது உயிரூட்டிய (முளைக்க வைத்த) தானியங்களே. இதிலிருந்து மிக்ஸியில் அரைத்து நீர் சேர்த்து முளை தானியப் பால்கள் தயாரித்தும் சாப்பிடலாம்.

சிரஞ்சீவி உணவுகள் இயற்கை உணவுகளே!

`உடல் நலம் மிகப் பெரிய ஊதியம்.

மனநலம் மிகப் பெரிய பொக்கிஷம்'

வயிற்றுப்புண், குடல் புண்ணுக்குத் தவறான அளவுக்கு மீறின அமில உணவுகளும் தவறான பழக்க வழக்கங்களும் மற்றும் உடல் நல பாதுகாப்பு பற்றி அறியாமையுமே. தேவையற்ற அளவுக்கு மீறின இரசாயன மருந்துப் பொருட்களும் உடல் நலத்தை சீரழித்து பிற வியாதிகளையும் உண்டு பண்ணுகின்றன. சமைக்காத இயற்கை உணவுகளும், கனிவு தரும் கனிகளும் பல வியாதிகளை விரட்டுகிறது. அதிலும் குடல் புண், வயிற்றுப் புண்களை விரைவில் குணம் அடையச் செய்கிறது. நலமான மனிதன் மட்டுமே பிறர் நலம், தேவையைப் பற்றி சிந்திக்க இயலும். வியாதியுள்ள மனிதர் பிறர் நலத்தையும் அதற்கான ஆலோசனை பற்றி பேச தகுதியில்லாதவர்களே. `தன்னை காத்துக் கொள்ள தவறியவர் பிறர் நலனை எப்படி சரி செய்வர்.

வயிற்றுவலி, குடல் புண் எவ்வளவு மோசமாக இருந்தாலும் நாட்பட்டதாக இருந்தாலும் மாதிரி ஒரு நாள் உணவு திட்டப்படி கடைப்பிடித்தால் ஒரு வாரத்தில் அற்புத குணம் கிட்டும். மருந்து மாத்திரைகள் தேவைப்படாது. இது உறுதி.

Herbal ...food

01.12.09 தொடர்கள்
எத்தனை அழகாக இருந்தாலும், இளமையாக இருந்தாலும், அதையெல்லாம் மீறி ஒருவருக்கு கவர்ச்சி அளிப்பதில் முதல் பங்கை அளிப்பது கண்கள்தாம். சோர்ந்து போய் `டல்'லடிக்கும் கண்களால் யாரைக் கவர முடியும்?

போதிய உறக்கம் இன்மை... வைட்டமின் மற்றும் மினரல் சத்து இல்லாத மாவுச் சத்து மற்றும் கொழுப்புச் சத்து மட்டுமே நிறைந்த உணவை உள்ளே தள்ளி, நேரம் கெட்ட நேரத்தில் உறங்கச் செல்லுவது... நாள் முழுக்க கம்ப்யூட்டர் முன்னே கண்களை மேயவிடுவது... கணக்கு வழக்கு இல்லாமல் டிவியைப் பார்ப்பது... எக்கச்சக்கமாக சினிமா பார்ப்பது... போதிய வெளிச்சம் இல்லாத நிலையில்... அதுவும் குறிப்பாக படுத்துக் கொண்டு படிப்பது....

இது போன்ற செயல்களால் `மசமசத்த' பார்வை... மங்கிய விழிகள்.... கண்களில் நீர் வடிதல்... போன்ற குறைபாடுகள்...

அடுத்து `சோடா பாட்டில்' கண்ணாடி... நவீன முறையில் என்றால் லேசர் அறுவை சிகிச்சை.

மெல்லிய கண்ணாடி... இத்யாதி...

முன்பெல்லாம் வயதானவர்கள்தான் பார்வை குறைபாட்டுக்கு கண்ணாடி அணிந்தார்கள். ஆனால் தற்போது எல்.கே.ஜி. குழந்தைகள் முதல் கண்ணாடி அணிந்து பவனி வருகிறார்கள்.

என்ன கொடுமை?

இள வயது முதலேயே சரியான ஊட்டமான உணவை உட்கொள்ள வைத்தால் கண்ணாடியையும் தவிர்க்கலாம்... ஒளி மிகுந்த அழகான கண்களையும் பெறலாம்.

எளிதான உணவு முறைகளைப் பார்க்கலாமா?

கறிவேப்பிலை... கறிவேப்பிலை.... என்றொரு அரும் மூலிகை நம் கையருகே கிடைக்கிறது.

ஆனால் பெரும்பாலானோர் அதை முதல் வேலையாக சாப்பாட்டுத் தட்டில் இருந்து எடுத்து கீழே போடுவதையே செய்கின்றனர்.

கறிவேப்பிலையின் மகத்துவத்தை உணர்ந்த பெரியோர்கள் அதை தினசரி உணவில் கொஞ்சமேனும் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே அதை சாம்பார், ரசம், பொரியல் என்று சேர்க்கத் தொடங்கினார்கள். வெறும் வாசனை கூட்டும் வஸ்துவாக அன்று...

கறிவேப்பிலையை பயன்படுத்தி மிகவும் சுவையான பண்டங்களைத் தயாரிக்கலாமே...

அத்தி கறிவேப்பிலை ஜூஸ்

அத்தி.... Botanical name..... Ficus carica

Family.... Moraceae

கறிவேப்பிலை

Botanical Name: Murraya koenigii

Family: Rutaceae

தேவை

உலர் அத்திப் பழம்....5

பச்சை கறிவேப்பிலை இலைகள் ..... 10

தேங்காய்ப் பால் ....1 கப்

வெல்லக் கரைசல் .... 2 மேஜைக்கரண்டி

ஜாதிக்காய்ப் பொடி...1 சிட்டிகை

செய்முறை: அத்திப்பழத்தை சிறிது தண்ணீரில் பத்து நிமிடம் ஊற வைக்கவும். உலர்ந்த கறிவேப்பிலை வேண்டாம்.... மாறாக பச்சை கறிவேப்பிலையை இரண்டாகக் கிள்ளி அதை அத்திப்பழம் ஊற வைத்த தண்ணீரில் சேர்க்கவும். இதை மிக்சியில் மைய அரைக்கவும். இத்துடன் வெல்லக் கரைசல், தேங்காய்ப் பால் மற்றும் ஜாதிக்காய்ப் பொடி ஆகியவற்றைச் சேர்த்து சுவைக்கவும்.

என்ன பயன்?

அத்தி.... வைட்டமின் ஏ செறிந்தது

கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், காப்பர் போன்ற அரிய தாதுக்கள் உடையது இரத்த விருத்தி செய்யும் அத்தி, குறிப்பாக பெண்களுக்கு மிகவும் பயனுள்ளது. வயிற்றைச் சுத்தமாக்கி உடலை `கலகல'வென்று வைக்கும் திறன் உடையது. வறட்டு இருமல், வாய்ப்புண், வயிற்றுப்புண் ஆகியவற்றுக்கு நல்ல தீர்வு. சத்து இழந்த உணர்வு உள்ள போது அத்தி சுறுசுறுப்பை அளிக்க வல்லது.

கறிவேப்பிலை... வைட்டமின் `ஏ' மற்றும் வைட்டமின் `சி', இரும்புச் சத்து, பாஸ்பரஸ், கால்சியம் போன்றவை மிகுந்த கறிவேப்பிலை இளமைக்கு உத்தரவாதம். கண் பார்வைக் குறைவு, கண் பொறை போன்ற குறைபாடு, வாந்தி வருவது போன்ற உணர்வு, பித்தம், வயிற்றுப்போக்கு, வயிற்று உப்புசம், இள நரை போன்றவைகளை நீக்கி பளிச்சிடும் கண்கள், கருங் கூந்தல் ஆகியவற்றை அளிக்க வல்லது கறிவேப்பிலை.

தேங்காய்ப் பாலுடன் சேரும் போது வயிற்று உபாதைகளைக் குறைத்து, இளமைத் தோற்றம் அளிக்கும் சுவையான பானமாக கிடைக்கிறது.

திடீர் பானம்

தேவை

கறிவேப்பிலை விழுது....1 தேக்கரண்டி

மோர்....1 கப்

உப்பு .... ருசிக்கேற்ப

செய்முறை :கறிவேப்பிலையை சிறிது நீர் சேர்த்து விழுதாக அரைக்கவும். புளிப்பில்லாத மோரில் இதைச் சேர்த்து, உப்பு கூட்டி கலக்கி சுவைக்கவும்.

என்ன பயன்?

வயிற்றில் `கடா முடா' சத்தம் அடங்கும். நல்ல ஜீரணம் உண்டாகும். வாய்வு பிரச்சனைக்கு டாட்டா.

சீமைப் பொன்னாங்கண்ணி கூட்டு

உணவு வகைகள்... அதுவும் குறிப்பாக கீரை வகைகளின் சத்து முழுக்க முழுக்க நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் அது கூட்டு வகையில்தான். ஆவியில் வேக வைத்தது. அல்லது கூட்டு போன்ற வகையில் பருப்பு சேர்த்து... அதுவும் பாசிப்பருப்பு சேர்த்த கூட்டு என்றால் சுவையும் கூடி, சத்தும் மிகுந்த பண்டமாக இருக்கும்.

தேவை:

சீமைப் பொன்னாங்கண்ணி கீரை.... 1 கப்,

பாசிப் பருப்பு.... கால் கப்,

தக்காளித் துண்டங்கள்... அரை கப்,

வெங்காயத் துண்டங்கள் ... அரை கப்,

பச்சை மிளகாய்...3

தேங்காய்த் துருவல்...1 மேஜைக் கரண்டி,

மஞ்சள் பொடி.... கால் தேக்கரண்டி,

சீரகம் ... அரை தேக்கரண்டி,

சமையல் எண்ணெய் .... 1 மேஜைக் கரண்டி,

கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் ... தாளிதம் செய்ய

செய்முறை: இளம் கீரையை காம்பு இல்லாமல் வெறும் இலைகளை மட்டும் ஆய்ந்து நன்கு கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.

பாசிப்பருப்பை குழைய வேக வைத்து எடுக்கவும்.

வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி அதில் வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் ஒன்று, போட்டு வதக்கி அதனுடன் தக்காளியைச் சேர்த்து ஒரு சிட்டிகை உப்பு கூட்டி வதக்கி அதோடு கீரையைச் சேர்த்து சிறிது நீர் சேர்த்து மஞ்சள் பொடியையும் கூட்டி வேக விடவும்.

வெந்த பிறகு அதோடு பாசிப்பருப்பைச் சேர்க்கவும். தேங்காய்த் துருவல், 2 பச்சை மிளகாய் மற்றும் சீரகம் சேர்த்து மிக்சியில் விழுவதாக அரைத்து கீரையுடன் சேர்த்து ஒரு கொதிவந்தவுடன், தாளிதம் செய்து இறக்கவும்.

சிவப்பு வண்ண சீமைப் பொன்னாங்கண்ணியை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ருசித்தால் கண்களுக்கு பளபளப்பும், தோலுக்கு மினுமினுப்பும் மிஞ்சுமே.

என்னது? கண்களைப் பற்றி பேசிவிட்டு கேரட்டைப் பற்றி சொல்லாமல் போவதா?

இதோ ஒரு இனிமையான ரெசிபி!

காரட் பாயாசம்

தேவை :

காரட் துருவல் ... 1 கப்,

பால் ... 2 கப்,

தேங்காய்த் துருவல்.... கால் கப்,

வெல்லக் கரைசல்... முக்கால் கப்,

நெய்யில் வறுத்த முந்திரி ... 10 மற்றும் திராட்சை 6

செய்முறை :

அடி கனமான பாத்திரத்தில் பாலை எடுத்து அதில் கேரட் துருவலைச் சேர்த்து மெல்லிய தீயில் வேக வைக்கவும்.

இதோடு வெல்லக் கரைசலைச் சேர்த்து கொதிக்க விடவும். கடைசியாக தேங்காய்த் துருவல் மற்றும் முந்திரி, திராட்சையை சேர்த்து இறக்கவும். சுவைக்கவும்.

என்ன பயன்?

கண்களுக்கு சூப்பரான ஒரு டானிக் கேரட் வைட்டமின் `ஏ' செறிந்தது.

இது மட்டுமன்று...

முறையான சிறுநீரகச் செயல்பாடு, இடைவிடாத இருமல், வயிற்றுப்பொருமல் போன்ற குறைபாடுகளுக்கு அடிக்கடி கேரட்டை உணவில் சேர்க்கலாம். பச்சையாக கேரட் சாப்பிட முடியாதவர்களுக்கு அதை இட்லிப் பானையில் ஆவியில் வேக வைத்துக் கொடுக்கலாம். குறிப்பாக குழந்தைகள் இதை விரும்புவார்கள். பச்சை கேரட்டை மென்று சாப்பிட்டால் பற்களின் இடுக்கில் தங்கி இருக்கும் துணுக்குகளை நீக்கும்... ஸோ,நோ பல் வலி!

நார்ச் சத்து மிக்க கேரட் உணவுப் பாதையில் அடைப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ளும். இது மட்டும் இல்லை... கல்லீரலுக்கு டானிக் போன்றது இது.

பளபளக்கும் கண்கள், நல்ல ஆரோக்கியமான சுருக்கமல் இல்லாத தோல் மற்றும் நோய் வராமல் தடுக்கும் ஆற்றல் உள்ள உடம்பு... இவைகளுக்கு தினசரி கேரட் சாப்பிடலாமே....

சூப்பர் சூப் :

முருங்கைக் கீரை மற்றும் ஒரு மலிவான பண்டம்.

அதென்னவோ முருங்கைக் கீரை என்றால் முகம் சுளிப்பவர் பலர். காரணம் அதன் வாடை மற்றும் பொடியான இந்தக் கீரையை ஆய்வதற்கு ஆகும் அதிக நேரம்.

கொஞ்சம் மெனக்கெட்டால் அதிக பயனை அடையலாமே....

தேவை :

முருங்கைக் கீரை இலைகள்...2 மேஜைக் கரண்டி

பொடியாக நறுக்கிய சாம்பார் வெங்காயம்... கால் கப்,

கார்ன் ஃப்ளோர் .... 1 தேக்கரண்டி

மைதா மாவு ... 1 தேக்கரண்டி

தக்காளி சாஸ் ... 2 தேக்கரண்டி

வெண்ணெய்.... 1 மேஜைக்கரண்டி

உப்பு மற்றும் மிளகுப் பொடி ... ருசிக்கேற்ப

செய்முறை:

முருங்கைக் கீரையை ஒன்றிரண்டாக இடிக்கவும். இரண்டு கப் நீரை கொதிக்கவிட்டு அதில் இடித்த கீரையைப் போட்டு வேக விடவும். தண்ணீரை வடித்து தனியே வைக்கவும்.

வாணலியில் வெண்ணெயை உருக்கி அதில் மிகவும் பொடியாக நறுக்கிய சாம்பார் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும் அதோடு கீரை வெந்த நீரை சேர்த்து வேக விடவும்.

இதில் விழுதாகக் கரைத்த கார்ன் ஃப்ளோர் மற்றும் மைதா கலவையைச் சேர்த்து கொதிக்கவிடவும்.

வடிகட்டி உப்பு மற்றும் மிளகுப் பொடி சேர்த்து கலக்கி சுவைக்கவும்.

என்ன பயன்?
சகாய விலையில் சமர்த்தான கீரை... வைட்டமின்கள் ஏ, பி, மற்றும் சி நிறைந்தது. இரும்புச் சத்து மற்றும் கால்சியம் செறிந்தது. அனீமியா, ரத்தப் போக்கு உள்ளோர் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் சிறந்தது. வயிற்று உபாதைகள், அல்சர் உள்ளோருக்கும் மற்றும் ஆஸ்துமாவினால் அவதிப் படுவோருக்கும் நல்ல தீர்வை அளிக்கும் ஒரு எளிய சூப் இது. ஆரஞ்சு, ஆப்பிள், பால் போன்ற விலை அதிகமான பொருட்களை வாங்க இயலாத ஏழைகளுக்கும் ஒரு அரிய வரப்பிரசாதம் இந்த முருங்கை சூப்.

இட்லி, இடியாப்பம், கஞ்சி சாப்பிடாதீர்கள்!

எளிதில் ஜீரணமாகும் உணவுகளை ஜிஐ (GI) என்கிறோம். Glycemic intex என்பதுதான் GI.

உடல் எடை குறைக்க விரும்புபவர்கள், ஜூஸ், கஞ்சி, இட்லி, இடியாப்பம் என்று எளிதில் ஜீரணமாகும் உணவுகளை சாப்பிடும்போது உணவு விரைவில் செரித்து க்ளுகோஸாக மாறிவிடுகிறது. விரைவில் செரித்து அதிகம் பசி எடுப்பதால், நாம் சாப்பிடும் உணவும் அதிகமாகிவிடும். இது சில நேரங்களில் சர்க்கரை நோய்க்குகூட வழிவகுத்துவிடும்.

கொஞ்சம் சாப்பிடுவதுதான் பிரச்னை!

அதற்காக இட்லி, இடியாப்பம், கஞ்சி, ஜூஸ் சாப்பிட்டாலே சர்க்கரை வியாதி வருமா என்றால், இல்லை. காரணம் உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் டயட் என்ற பெயரில் 2 இட்லி, ஒரு டம்ளர் கஞ்சி, ஒரு டம்ளர் ஜூஸ், கொஞ்சம் இடியாப்பம் என்று எடுத்துக் கொள்வார்கள். அதனால்தான் இந்த அபாயம். அதுவே நார்மலாக சாப்பிடுபவர்கள் வயிறு நிறைய இட்லி, இடியாப்பம், கஞ்சி, ஜூஸ் என்று சாப்பிடும்போது அது எந்தவித பக்கவிளைவையும் ஏற்படுத்தாது.

இதோ சில உணவுகளில் உள்ள நி.மி. அளவுகள்..

நீங்கள் எந்த அளவுக்கு வெயிட் குறைக்க விரும்புகிறீர்களோ அந்த அளவுக்கு நி.மி. அளவு குறைய வேண்டும்.

ராஜ்மாவில் நி.மி. அளவு 29
வாழைப்பழத்தில் நி.மி. அளவு 69
சோயாவில் நி.மி. அளவு 43
ஆப்பிள் பழத்தில் நி.மி. அளவு 39
ஆரஞ்சு, சாத்துக்குடியில் நி.மி. அளவு 40

உடல் எடை குறைக்க விரும்புவோர் என்ன அதிகம் சாப்பிடலாம்?

வெந்தயக் கீரை, காய்கறிகள் சேர்த்த சப்பாத்தி, தோசை, பொஙகல், அடை, பயத்தம்பருப்பு போன்றவை சேர்த்த உணவுகள் சாப்பிடலாம்.

இளைக்கணும்னா தோசை சாப்பிடுங்க!

நமது சமையல் முறைப்படி இட்லிக்கு பதில் எண்ணெய்விடாத தோசை சாபிட்டால் விரைவில் செரிக்காது, உடல் எடை குறைக்க விரும்புவோர் அளவாக தோசை சாப்பிடலாம்.

பொங்கல், அடை போன்ற உணவுகளில் நிறைய புரதம், நார் சத்துக்கள் இருப்பதால் எளிதில் ஜீரணமாகாது. இவை உடனே சர்க்கரையாக மாறும் உணவுத்தன்மை இல்லாதது. எனவே பொங்கல், அடையையும் அளவோடு சாப்பிடலாம்.

01.12.09 மற்றவை

``பொதுவாகவே டீ வகைகளில் க்ரீன் டீ, சி.டி.சி. டீ (சிஜிசிஜி) என்று இரண்டு வகை உண்டு. சி.டி.சி.டீ'தான் நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமானது. ஆனால், சீனமக்களிடையே தொன்று தொட்டு பாரம்பரியமாக தொடர்ந்துவருவது க்ரீன் டீ. இந்த க்ரீன் டீ இதன் மருத்துவ குணத்தால் இப்போது நம்மிடையேயும் பிரசித்தி பெற்றுவருகிறது'' என்று கூறுகிறார் டாக்டர் மகேஷ்வரராவ். க்ரீன் டீயைப் பற்றி இதோ விளக்கமாகக் கூறுகிறார்.

சி.டி.சி.டீ.

கட் டர்ன் அண்ட் க்ரஷ் டீ (CUT TURN AND CRUSH TEA) என்னும் பதப்படுத்தப்பட்ட, நாம் அன்றாடம் குடித்துப் பழகிவந்த டீ-தான் இந்த சி.டி.சி.டீ.

க்ரீன் டீ

பயோகெமிக்கல் முறையில் நிழலில் உலர்த்தி பதப்படுத்தப்படும் தேயிலைதான் க்ரீன் டீ என்பது.

க்ரீன் டீக்கு எதனால் இந்த மகத்துவம்?

கேட்சின் கோலிபெனல்ஸ் (Catechin Colyphenois)-தான் க்ரீன் டீயின் மெயின் விஷயம்... அதாவது பவர்ஃபுல் ஆன்டிஆக்ஸிடெண்ட்ஸ் எனப்படும் மிகச்சிறந்த நோயெதிர்ப்புச் சக்தி இந்த டீயில் குவிந்து கிடக்கிறது என்பதுதான் இதில் ஹைலைட்.

கேன்சருக்கு மிக நல்லது!

கேன்ஸர்: பொதுவாக கேன்சர் ட்ரீட்மென்ட் என்றால் ரேடியேஷன் கதிர்வீச்சுதான் மெயின். இந்த ரேடியேஷன் கதிர்வீச்சு கேன்சர் செல்களை மட்டுமின்றி கூடவே நல்ல செல்களையும் கொல்கிறது. ஆனால், இந்த க்ரீன்-டீ கேன்சர் செல்களை மட்டும் கொல்கிறது. காரணம் அதன் கேட்சின் கோலிபெனல்ஸ்தான் என்றாலும் கேன்சருக்கான `உடனடி ட்ரீட்மென்டாக' மருத்துவர்கள் க்ரீன் டீயை பரிந்துரைப்பதில்லை. காரணம் கேன்சரின் ஆரம்ப அறிகுறியிலிருந்து நீண்ட நெடுங்காலம் தொடரவேண்டிய வழிமுறை இது என்பதால்தான்.

சீன மக்களின் ஸ்லிம் ரகசியம்!

காலம் காலமாக சீன மக்கள் விரும்பிக் குடிக்கும் டீ இந்த க்ரீன் டீ! சீனர்கள், பன்றி இறைச்சி சாப்பிடுபவர்கள். குட்டிகுட்டியாக சாப்பாட்டை அடிக்கடி சாப்பிடுபவர்கள். எனவே இவர்கள் உணவுமுறையில் கெட்ட கொழுப்பு சேரும் அபாயம் கண்டிப்பாக இருக்கிறது. ஆனால் சீனர்களுக்கு தினமும் அடிக்கடி க்ரீன் டீ பருகும் பழக்கமும் இருப்பதால், இந்த க்ரீன் டீ கெட்ட கொழுப்பை இவர்கள் உடம்பில் அறவே சேரவிடாமல் தடுக்கிறது.

ரத்தநாளங்களின் அடைப்பு நீக்கும்!

பொதுவாகவே நாம் சாப்பிடும் சமூசா, பீட்ஸா, வடை, சிக்கன் 65 போன்ற ஜங்க் ஃபுட், ஆயில் ஃபுட்களாலும், ஸ்வீட்ஸ்களாலும் இப்படி தவறான உணவுப்பழக்க முறையால் உண்டாகும் கெட்ட கொழுப்பினால் ரத்தநாளங்களில் அடைப்பு ஏற்படும். இது ஹார்ட் அட்டாக் வரைகூட போகும். இந்த ரத்தநாளங்களின் அடைப்பைப் போக்கி நார்மல் நிலைக்குக் கொண்டுவரும் பணியைச் செய்கிறது இந்த க்ரீன் டீ.

மூட்டுப்பிரச்னைகள், ஹை ப்ளட்ப்ரஷர், இதய நோய்கள்

தொடர்ந்து க்ரீன் டீ பருகிவந்தால் மேற்கண்ட அத்தனை பிரச்னைகளும் கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்து நாளடைவில் காணாமல் போகிறது.

சளி, ஜுரம் வராது

அன்றாடம் காற்றில் நிறைந்துள்ள சின்னசின்ன தொற்றுக்கிருமிகளால் நமக்கு சளி, ஜுரம் உண்டாகிறது. இந்த நோய்களை தோற்றுவிக்கும் கிருமிகளைக்கூட கொல்கிறது க்ரீன் டீ தரும் எதிர்ப்புச்சக்தி.

உடல் நடுக்கம்

சிலருக்கு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்துபோவதால் உடல்நடுக்கம் இருக்கும். நல்ல செல்களை உருவாக்கி, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்வதன் மூலம் அவர்களின் உடல் நடுக்கத்தைப் போக்குகிறது இந்த க்ரீன் டீ.

எடை குறைக்க விரும்புகிறீர்களா?

க்ரீன் டீயைப் பருகுவதால் Fat Oxidation thermogeniuesis எனப்படும் குறிப்பிட்ட சிஸ்டம் மூலம் உடலில் சேர்ந்துள்ள கலோரிகள் உடனடியாக எரிக்கப்படுகிறது. எனவேதான் உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் க்ரீன் டீயை அடிக்கடி சாப்பிடுங்கள் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். சீன மக்களின் உணவுப் பழக்கவழக்கத்தின்படி அவர்களின் உடல் எடை அதிகமாகத்தான் இருக்கவேண்டும். ஆனால் அவர்கள் அப்படி குண்டாக இல்லாததற்கு இந்த க்ரீன் டீயே காரணம்'' என்று முடிக்கிறார் டாக்டர் மகேஷ்வரராவ்..

சீன மக்களிடம் இல்லவே இல்லை!

நாம் அன்றாடம் `டீ' என்ற பெயரில் பருகும் சி.டி.சி.டீ. பழக்கம் சீன மக்களிடம் இல்லவே இல்லை! அதிலும் குறிப்பாக பால் ஊற்றி டீ சாப்பிடும் பழக்கம் சுத்தமாக இல்லை.

டயபடீஸ் இருக்கா உங்களுக்கு?

நல்ல டயட், உடற்பயிற்சி, மன அழுத்தமின்மை போன்றவற்றோடு, அன்றாடம் க்ரீன் டீயும் பருகிவந்தால் சுகர் நல்ல கட்டுப்பாட்டில் இருக்கும். காரணம் எந்த உணவும், செரிமானத்துக்குப்பின் குளுகோஸாக மாறி ரதத்தத்தில் சேராதபடி க்ரீன் டீ தடுக்கிறது.

க்ரீன் டீ'க்கு நிகரில்லை

என்னதான் சாப்பாட்டில் மசாலா, அஜினமோட்டோ போன்ற ஜீரணசக்திப் பொருட்களை சேர்த்திருந்தாலும்கூட உணவுக்குப்பின் க்ரீன் டீ பருகுவதற்கு எதுவுமே நிகரில்லை. ஜீரணசக்தியை அந்தளவுக்கு தூண்டிவிடும். உடனடியாக கெட்ட கெழுப்பையும் நீக்கும்.