|
| NAGARAJI | ஜலதோஷமும்,சளிக்காய்ச்சலும் வராமல் தடுத்துக் கொள்ள இயற்கையான வழிமுறைகள் உள்ளன. அப்படியே இவை எட்டிப் பார்த்தாலும் உடனே தடுக்கும் ஆற்றல் கொண்ட சில உணவுகள் உள்ளன.
நச்சு நுண்மங்களையும், நோய் நுண்மங்களையும் உடலுக்குள் நுழைய விடாமல் தடுப்பதில் வெள்ளைப் பூண்டு முதலிடத்தில் இருக்கிறது. இதில் உள்ள அலிசின் என்ற பொருள் கல்லீரலை முழுமையாகத் தூய்மை செய்கிறது. இதன் மூலம் இரத்தமும் சுத்தமாக்கப்பட்டு வெள்ளை இரத்த அணுக்களை தொடர்ந்து உற்பத்தி செய்யத் தூண்டி விடப்படுகிறது. நாம் அறியாமல் சுத்தம் இல்லாத உணவுகளைச் சாப்பிட்டிருந்தாலும், குளிர்காலத்தில் ஜலதோஷம்,காய்ச்சல் தாக்காமல் இருக்கவும் காலையில் பூண்டுப்பற்களில் 5,6ஐ நல்லெண்ணெயில் வதக்கிச் சாப்பிட்டு வந்தால் போதும். உணவுகளில் பூண்டு சேர்த்து வந்தாலும் இப்படி தனியாகச் சாப்பிடுவது நல்லது.
அடுத்து இஞ்சி. உணவில் இஞ்சி சேர்த்துச் சமைப்பது. ஒரு வேளை சுக்கு காபி அருந்துவது. ஜலதோஷமும், சளிக்காய்ச்சலும் (FLU) இருந்தால் இரண்டு வேளை சுக்குக்காபி அருந்தி வர வேண்டும். இஞ்சியில் உள்ள உடனே ஆவியாகும் நறுமண எண்ணெய் வகைகள் உடலுக்கு வெப்பத்தையும் தந்து உடலை வியர்க்கச் செய்து காய்ச்சலையும் குணப்படுத்துகிறது. உடலில் உள்ள விஷப் பொருள்களையும் உடனே வெளியேற்றுகிறது. மேலும் நெஞ்சில் உள்ள சளியையும் வெளியேற்றி நுரையீரல்கள் நன்கு செயல்பட உதவுவதால் மூச்சு இரைப்பு குறைந்து நன்கு சுவாசிக்க முடியும். ஜீரண மண்டலத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், உணவுகள் ஜீரணமாகவும் இஞ்சி சேர்த்து சமைத்த உணவுகளை ஒரு வேளையாவது உணவில் இடம் பெறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
குளிர்காலத்தில் தொண்டை வலியையும் குணப்படுத்தி உடலில் எரிச்சல் ஏற்படாமலும் தடுக்கிறது, தேன். இருமல் மருந்துகளை விட தேன் சிறப்பாகச் செயல்பட்டு தொற்று நோய், இருமல், சளி, ஆஸ்துமா, அலர்ஜி போன்றவற்றைத் தடுக்கிறது. தினமும் ஒரு தேக்கரண்டி அல்லது இரண்டு தேக்கரண்டி தேன் சளிக் காய்ச்சல் நேரத்தில் சாப்பிட்டு வந்தால் சளி முற்றிலும் நீர்த்துப் போகும்.
அடுத்து தயிர். உடலில் தீங்கு விளைவிக்கும் நோய் நுண்மங்கள் இருந்தால் கழுத்தைப் பிடித்துத் தள்ளுவது போல தயிரில் உள்ள அசிட்டோபிளஸ், ஃபிடஸ் என்ற இரு தோழமையுள்ள பாக்டீரியாக்கள் உள்ளன. ஜலதோஷமும், சளிக்காய்ச்சலும் குணமாகும்வரை இரண்டு கோப்பை தயிர் சாப்பிட்டு வரவும். நல்ல பாக்டீரியா சேர்த்த தயிர் இப்போது எங்கும் கிடைக்கிறது. வீட்டில் உறைய வைக்கும் தயிரும் நல்ல தயிரே.
ஒரு நாள் விட்டு ஒரு நாள் என அடர்த்தியான பச்சை நிறத்தில் உள்ள தண்டுக்கீரை, பசலைக்கீரை, முளைக்கீரை என ஏதாவது ஒருவகைக் கீரையை உணவில் சேர்த்து வரவும். இவை மகா ஆற்றலுடன் ஜலதோஷம், சளி, காய்ச்சல் போன்றவற்றை உண்டாக்கும் நோய் நுண்மங்களை அழித்து உடல்நலத்தைப் புதுப்பிக்கின்றன.
குளிர்காலத்திலும், ஜலதோஷம், சளிக்காய்ச்சல், மற்றும் பிற உடல் நலப்பிரச்னைகள் இருக்கும்போதும் தினமும் ஓர் எலுமிச்சைப் பிழிந்து அதில் சுடுதண்ணீர் ஒரு டம்ளர், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து காலையில் அருந்தி விடவும். காரணம், இதில் உள்ள சிட்ரிக் அமிலம் உடலில் கலப்பதால், இரத்தத்தில் உள்ள காரச்சத்து (Alkaline) கூடுகிறது. இதனால் உடலில் இரசாயன மாற்றம் ஏற்பட்டு நோய்கள் உடனே குணமாகின்றன. மேலும் பழத்தில் உள்ள வைட்டமின் சி நோய்க் கிருமிகளை விரைந்து அழிக்கும் தன்மை கொண்டதாகும்.
இதனால் ஜலதோஷம்,சளிக்காய்ச்சல் இன்றி ஆண்டு முழுவதும் நலமுடன் வாலூம்.
|
|
0 comments:
Post a Comment