முளைகட்டிய பயறு சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், முளைகட்டிய பயறு (ஏதாவது ஒரு பயறு) - கால் கப், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சீரகத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு, நெய் - தேவையான அளவு.
செய்முறை: முளைகட்டிய பயறு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். அரைத்ததை கோதுமை மாவுடன் சேர்த்து, உப்பு சேர்த்துக் கலந்து, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். மாவிலிருந்து சிறிய உருண்டைகளை எடுத்து, சப்பாத்திக்கல்லில் தேய்த்துத் தவாவில் போட்டு, சப்பாத்திகளாகச் சுட்டு, நெய் தடவி எடுக்கவும்.
இது, புரோட்டீன் சத்து நிறைந்த சப்பாத்தி



கோதுமை இட்லி
தேவையானவை: உடைத்த கோதுமை - ஒரு கப், உளுந்து - கால் கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கோதுமை, உளுந்து இரண்டையும் தனித்தனியாக 2 மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும். உப்பு சேர்த்துக் கலக்கி 8 மணி நேரம் புளிக்க வைக்கவும். புளித்த மாவை இட்லித் தட்டில் விட்டு, ஆவியில் வேக வைத்து எடுத்தால், கோதுமை இட்லி தயார்!
இதற்கு, காரச் சட்னி, தக்காளி சட்னி தொட்டுக் கொள்ள சிறந்த காம்பினேஷன்!
இதேபோல் கம்பு, கேழ்வரகு, தினை, சாமையிலும் இட்லி செய்யலாம்.


லெமன் இடியாப்பம்
தேவையானவை: இடியாப்ப மாவு - 2 கப், எலுமிச்சம்பழம் - ஒன்று, கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, வேர்க்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: சுடுதண்ணீரில் உப்பு கலந்து, இடியாப்ப மாவில் விட்டுப் பிசைந்து கொள்ளவும். மாவை இடியாப்ப குழாயில் போட்டு இடியாப்பம் பிழிந்து, ஆவியில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். ஆறியவுடன், உதிர்த்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு.... கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை தாளிக்கவும். பிறகு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலக்கவும். உதிர்த்த இடியாப்பத்தை அதனுடன் சேர்த்துக் கலந்து, அடுப்பை அணைக்கவும். கடைசியில் எலுமிச்சம்பழச் சாறு சேர்த்துக் கிளறி


சம்பா கோதுமை கிச்சடி
தேவையானவை: சம்பா கோதுமை ரவை - 2 கப், பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர், குடமிளகாய் கலவை - ஒரு கப், வெங்காயம், தக்காளி - தலா ஒன்று (நறுக்கியது), கீறிய பச்சை மிளகாய் - 4, இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், சோம்பு - கால் டீஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, பிரிஞ்சி இலை - ஒன்று, புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு, எண்ணெய், நெய் - தேவையான அளவு.
செய்முறை: வெறும் கடாயில் கோதுமை ரவையை வறுத்துக் கொள்ளவும். காற்கறிகளை ஆவியில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு... பட்டை, பிரிஞ்சி இலை, சோம்பு தாளித்து, தக்காளி, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இஞ்சி-பூண்டு விழுது, வேக வைத்த காய்கறிகள், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மீண்டும் கிளறியதும், தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்ததும் மிதமான தீயில் அடுப்பை வைத்து, வறுத்த ரவையை சேர்த்துக் கிளறவும். எல்லாம் சேர்ந்து ஒன்றாகக் கலந்து வெந்ததும், சிறிது நெய் விட்டு புதினா, கொத்தமல்லி தூவி இறக்கவும்.


ஈஸி சாண்ட்விச்
தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 10-12, தக்காளி சாஸ், கொத்தமல்லி சட்னி - தேவையான அளவு, வெங்காயம், தக்காளி, வெள்ளரி - தேவையான அளவு (வட்டமாக நறுக்கியது), ஜாம் - சிறிதளவு.
செய்முறை: பிரெட் ஸ்லைஸின் ஓரங்களை நறுக்கி எடுத்து விடவும். முதல் ஸ்லைஸில் தக்காளி சாஸ் தடவி, அதன் மேல் வெள்ளரித் துண்டை வைக்கவும். மற்றொரு ஸ்லைஸை மேலே வைக்கவும். அதன் மேல் கொத்தமல்லி சட்னி தடவி, வெங்காயம் அல்லது தக்காளித் துண்டுகளை வைக்கவும். இன்னொரு ஸ்லைஸ் வைத்து, அதன் மேல் சிறிது ஜாம் தடவி, முக்கோணமாக வெட்டி வைக்க... சாண்ட்விச் ரெடி!
இது, 5 நிமிடத்தில் செய்யக்கூடிய சத்தான டிஷ்.