ரசகுல்லா (மேற்கு வங்காளம்)
தேவையானவை: கெட்டியான பால் - 8 கப், சர்க்கரை - ஒன்றரை கிலோ, பச்சைக் கற்பூரம் - ஒரு சிட்டிகை, குங்குமப்பூ - சிறிதளவு, மைதா மாவு - 8 டீஸ்பூன், சோடா உப்பு - கடுகு அளவு, எலுமிச்சைச் சாறு - கால் கப், தண்ணீர் - 10 கப்.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் பாலை விட்டு, அடுப்பில் வைத்துக் காய்ச்சி, கொதித்ததும் எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். உடனே பால் முறிந்துவிடும். அதை இறக்கி, 5 நிமிடம் மூடி வைக்கவும். தண்ணீர் தனியாக பிரிந்து விடும். ஒரு வெள்ளைத் துணியில் வடிகட்டி, முடிச்சுப் போட்டு, உயரமான இடத்தில் கட்டி வைக்கவும். தண்ணீர் முழுவதும் வடிந்ததும் (சுமார் 4 மணி நேரம் கழித்து), மூட்டையை அவிழ்த்து ஒரு தாம்பாளத்தில் போட்டு உதிர்த்துக் கொள்ளவும். அதனுடன் சோடா உப்பு, மைதா மாவு சேர்த்து உள்ளங்கையால் தேய்த்து, நன்றாகப் பிசைந்து, சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்து வடிகட்டவும். இதைத் திரும்பவும் அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க வைக்கவும். ஏற்கெனவே உருட்டி வைத்துள்ள உருண்டைகளில் ஒன்றை அதில் போட்டு பார்த்து... கரையாமல் இருந்தால் ஏழு, எட்டு உருண்டைகளைப் போடவும். கிளறத் தேவையில்லை. உருண்டைகள் தானாகவே மிதந்து வரும். மெல்லிய குச்சியால் ஒருமுறை புரட்டி விடவும். அந்த உருண்டைகளை தனியே எடுத்து வைத்துக் கொண்டு, மீதமிருக்கும் உருண்டைகளையும் இதோ போல போட்டு எடுக்கவும்.
பிறகு, சிறிது பாலில் கரைத்த குங்குமப்பூவை, அந்தச் சர்க்கரை தண்ணீரில் சேர்க்கவும். கூடவே, பச்சைக் கற்பூரமும் சேர்த்து இறக்கவும். வேக வைத்து எடுத்த உருண்டைகள் அனைத்தையும் அதில் போட்டு, அப்படியே பரிமாறலாம்.