சர்க்கரைவள்ளி லெமன் புட்டு
தேவையானவை: சர்க்கரைவள்ளிக் கிழங்கு (சுட்டு உதிர்த்துக் கொள்ளவும்) - ஒரு கப், வறுத்த வேர்க்கடலை, எள் பொடி (இரண்டும் சேர்த்து) - கால் கப், கடுகு, பெருங்காயம், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, பச்சை மிளகாய் விழுது - அரை டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு, மஞ்சள்தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு - சிறிதளவு.

செய்முறை: கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் தாளித்து, பச்சை மிளகாய் விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு, மஞ்சள்தூள், உப்பு சேர்த்துப் புரட்டி, உதிர்த்த வள்ளிக்கிழங்கு மற்றும் வேர்க்கடலை, எள் பொடிகள் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். இறக்கும்போது, எலுமிச்சைச் சாறு விட்டு, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

தேவையானவை: கம்பு மாவு - ஒரு கப், வெல்லம் - அரை கப், தேங்காய் துருவல் - கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெறும் கடாயில் கம்பு மாவை போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும். ஆறியதும் உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பிசிறி... ஆவியில் வேக விட்டு எடுக்கவும். பொடித்த வெல்லத்தை தண்ணீரில் கரைத்து, வடிகட்டி பாகு காய்ச்சவும். பாகு கரைசலில் வறுத்து, வேக வைத்து, ஆற வைத்த கம்பு மாவு, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி உருண்டைகளாக உருட்டவும். உருண்டைகளை ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
வித்தியாசமான சுவையுடன் இருக்கும் இந்தக் கொழுக்கட்டை.

தேவையானவை: தினை மாவு - ஒரு கப், கருப்பட்டி - அரை கப், தேங்காய் துண்டுகள் - கால் கப், சுக்குப்பொடி - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெறும் கடாயில் தினை மாவைப் போட்டு வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும். ஆறியதும் உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசிறி ஆவியில் வேக வைத்து ஆற விடவும். பொடித்த கருப்பட்டியை தண்ணீரில் கரைத்து வடிகட்டி, பாகாகக் காய்ச்சவும். நறுக்கிய தேங்காய் துண்டுகள், சுக்குப்பொடி சேர்த்துக் கலக்கி, ஆற வைத்துள்ள கம்பு மாவில் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டிக் கொள்ளவும். இதேபோல் ஒவ்வொரு உருண்டையாக உருட்டி ஆவியில் வேக விட்டு எடுக்க... தினை மாவு கொழுக்கட்டை ரெடி!

தேவையானவை: கேழ்வரகு மாவு - ஒரு கப், பொடித்த வெல்லம், தேங்காய் துருவல் - தலா அரை கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.
செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, கொதிக்க விடவும். கொதித்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்து... கேழ்வரகு மாவு, வெல்லம், தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து கெட்டியாகக் கிளறவும். ஆறியவுடன், அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாவை எடுத்து சிறு உருண் டைகளாகப் பிடிக்கவும். இதேபோல் ஒவ்வொரு உருண்டையையும் தயார் செய்து ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.

தேவையானவை: பச்சரிசி மாவு - ஒரு கப், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 2 அல்லது 3, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும். பிறகு தண்ணீர், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். கொதித்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து பச்சரிசி மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தூவி கட்டியில்லாமல் கிளறி, ஆற விடவும். மாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து விருப்பமான வடிவில் உருட்டி, ஆவியில் வேகவிட... தாளிப்பு கொழுக்கட்டைகள் தயார்!
புழுங்கல் அரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைத்து, அரைத்து இதே போல் செய்யலாம்.

தேவையானவை - மேல் மாவுக்கு:பச்சரிசி மாவு - 2 கப், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், வாழை இலை - 10 முதல் 15 துண்டுகள், உப்பு - தேவையான அளவு.
பூரணத்துக்கு: தேங்காய் துருவல் - ஒரு கப், வெல்லம் - கால் கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீரை விட்டு கொதிக்க விடவும். அதில்... உப்பு, நல்லெண்ணெய் சேர்க்கவும். கொதிக்கும்போதே, மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தூவி, கட்டியில்லாமல் நன்கு கிளறவும். மாவு கெட்டியானதும் இறக்கி, 10 நிமிடம் ஈரத் துணியால் மூடி வைக்கவும்.
வெல்லத்தைப் பாகாகக் காய்ச்சி அதனுடன் ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை கிளறவும். பூரணம் ரெடி.
தயார் செய்து வைத்துள்ள மேல் மாவிலிருந்து கொஞ்சம் எடுத்து, கழுவிய வாழை இலையில் பரப்பி, நடுவில் பூரணம் வைத்து, இலையோடு சேர்த்து மூடவும். இதேபோல் ஒவ்வொன்றையும் தயார் செய்து ஆவியில் வேக விட்டு எடுக்க.. வாழை இலை மணத்தோடு கொழுக்கட்டை தயார்! இதேபோல் பூவரசு இலையிலும் செய்யலாம். விருப்பத்துக்கு ஏற்ற பூரணம் வைத்து தயார் செய்யலாம்.

தேவையானவை - மேல் மாவுக்கு: பச்சரிசி மாவு - 2 கப், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
பூரணத்துக்கு: பாசிப்பயறு - ஒரு கப், தேங்காய் துருவல் - கால் கப், மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீரை விட்டு கொதிக்க விடவும். அதில்... உப்பு, நல்லெண்ணெய் சேர்க்கவும். கொதிக்கும்போதே, மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தூவி, கட்டியில்லாமல் நன்கு கிளறவும். மாவு கெட்டியானதும் இறக்கி, 10 நிமிடம் ஈரத் துணியால் மூடி வைக்கவும்.
பாசிப்பயறை 6 மணி நேரம் ஊற வைத்து, பின் வேக விடவும். வெந்ததும் தண்ணீரை வடித்து, உப்பு, மிளகாய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும். பூரணம் ரெடி!
தயார் செய்து வைத்துள்ள மேல் மாவிலிருந்து கொஞ்சம் எடுத்து, கிண்ணம் போல் செய்து கொள்ளவும். அதனுள் பாசிப்பயறு பூரணத்தை வைத்து மூடவும். இதேபோல் ஒவ்வொன்றையும் தயார் செய்து கொள்ளவும். அவற்றை ஆவியில் வேக விட்டு எடுத்தால்... பாசிப்பயறு கொழுக்கட்டை தயார்!
வேக வைத்த பயறுக்கு பதிலாக முளைகட்டிய பயறையும் பயன்படுத்தலாம்; இந்த கொழுக்கட்டையை காராமணியிலும் செய்யலாம்.

தேவையானவை - மேல் மாவுக்கு: பச்சரிசி மாவு - 2 கப், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
பூரணத்துக்கு: பீட்ரூட் துருவல் - ஒரு கப், சர்க்கரை - கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.
செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீரை விட்டு கொதிக்க விடவும். அதில்... உப்பு, நல்லெண்ணெய் சேர்க்கவும். கொதிக்கும்போதே, மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தூவி, கட்டியில்லாமல் நன்கு கிளறவும். மாவு கெட்டியானதும் இறக்கி, 10 நிமிடம் ஈரத் துணியால் மூடி வைக்கவும்.
அடி கனமான கடாயில், துருவிய பீட்ரூட் சேர்த்து வதக்கவும். பிறகு... சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு சுருண்டு வரும்வரை கிளறவும். பூரணம் ரெடி.
தயார் செய்து வைத்துள்ள மேல் மாவிலிருந்து சிறு உருண்டைகளாக எடுத்து, கிண்ணம் போல் செய்து அதனுள் பீட்ரூட் கலவையை வைத்து மூடவும். இதேபோல் ஒவ்வொன்றையும் தயார் செய்து, ஆவியில் வேகவிட்டு, எடுக்கவும்.

தேவையானவை - மேல் மாவுக்கு: பச்சரிசி மாவு - 2 கப், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
பூரணத்துக்கு: கேரட், முட்டைகோஸ் துருவல் - தலா கால் கப், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீரை விட்டு கொதிக்க விடவும். அதில்... உப்பு, நல்லெண்ணெய் சேர்க்கவும். கொதிக்கும்போதே, மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தூவி, கட்டியில்லாமல் நன்கு கிளறவும். மாவு கெட்டியானதும் இறக்கி, 10 நிமிடம் ஈரத் துணியால் மூடி வைக்கவும்.
கேரட், முட்டைகோஸ் துருவலை ஆவியில் வேக வைத்து எடுக்கவும். அவற்றுடன் உப்பு, மிளகுத்தூள், கொத்தமல்லி சேர்த்து நன்கு கிளறவும். பூரணம் ரெடி.
தயார் செய்து வைத்துள்ள மேல் மாவிலிருந்து எடுத்து... கிண்ணம் போல் செய்து கொள்ளவும். அதனுள் காய்கறிக் கலவையை வைத்து மூடவும். இதேபோல் ஒவ்வொன்றையும் தயார் செய்து ஆவியில் வேக விட்டு எடுக்க... விட்டமின் சத்து நிறைந்த காய்கறி கொழுக்கட்டை ரெடி!
காரத்துக்கு பதில், இனிப்பு சேர்த்தும் செய்யலாம்.

தேவையானவை: புழுங்கல் அரிசி - 2 கப், வெல்லம், பாசிப்பருப்பு - தலா ஒரு கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.
செய்முறை: புழுங்கல் அரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைத்து, நைஸாகவும் கெட்டியாகவும் அரைத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பொடித்த வெல்லத்தைப் பாகாகக் காய்ச்சிக் கொள்ளவும். ஊற வைத்த பாசிப்பருப்பு, ஏலக்காய்த்தூள், அரைத்து வைத்திருக்கும் அரிசி மாவு ஆகியவற்றை வெல்லப் பாகுடன் சேர்த்துக் கிளறவும். மாவு இளஞ்சூடுடன் இருக்கும்போதே கொழுக்கட்டைகளாகப் பிடிக்கவும். இதேபோல் ஒவ்வொன்றையும் பிடித்து... ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

தேவையானவை: பச்சரிசி மாவு, கருப்பட்டி - தலா ஒரு கப், தேங்காய் துருவல் - கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.
செய்முறை: கருப்பட்டியைப் பொடித்து தண்ணீரில் கரைத்து கொதிக்கவிடவும். அதனை வடிகட்டி ஆறவிடவும். அந்தப் பாகில் தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், பச்சரிசி மாவு ஆகியவற்றை சேர்த்துக் கிளறி கெட்டியாகப் பிசையவும்.
அந்த மாவிலிருந்து கொஞ்சம் எடுத்து, எண்ணெய் தடவிய உள்ளங்கையில் வைத்து உருளைகளாகப் பிடிக்கவும். இதேபோல் ஒவ்வொன்றையும் தயார் செய்யவும். அவற்றை ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
தேங்காய் துருவலுக்குப் பதிலாக, தேங்காயை சிறு சிறு துண்டுகளாக்கியும் சேர்க்கலாம்

தேவையானவை - மேல் மாவுக்கு: பச்சரிசி மாவு - 2 கப், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
பூரணத்துக்கு: சோயா உருண்டைகள் - 20, வெல்லம் - அரை கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.
செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீரை விட்டு கொதிக்க விடவும். அதில்... உப்பு, நல்லெண்ணெய் சேர்க்கவும். கொதிக்கும்போதே, மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தூவி, கட்டியில்லாமல் நன்கு கிளறவும். மாவு கெட்டியானதும் இறக்கி, 10 நிமிடம் ஈரத் துணியால் மூடி வைக்கவும். கொதி நீரில் சோயா உருண்டைகளைப் போட்டு 10 நிமிடம் அப்படியே வைக்கவும். பிறகு எடுத்து குளிர்ந்த தண்ணீரில் கழுவி, பிழியவும். இதனை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்றி எடுக்க... துருவல் போல வரும். பொடித்த வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டி கொதிக்க விடவும். அதனுடன் சோயா துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து சுருளக் கிளறவும். தயார் செய்து வைத்துள்ள மேல் மாவிலிருந்து கொஞ்சம் எடுத்து சொப்பு செய்து, சோயா கலவையை வைத்து மூடவும். அதேபோல் ஒவ்வொன்றையும் தயார் செய்த பின் ஆவியில் வேக வைத்து எடுக்க... புரோட்டீன் ரிச் சோயா கொழுக்கட்டை தயார்.

தேவையானவை - மேல் மாவுக்கு: பச்சரிசி மாவு - 2 கப், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
பூரணத்துக்கு: கறுப்பு எள், வெல்லம் - தலா 100 கிராம்.
செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீரை விட்டு கொதிக்க விடவும். அதில்... உப்பு, நல்லெண்ணெய் சேர்க்கவும். கொதிக்கும்போதே, மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தூவி, கட்டியில்லாமல் நன்கு கிளறவும். மாவு கெட்டியானதும் இறக்கி, 10 நிமிடம் ஈரத் துணியால் மூடி வைக்கவும்.
சுத்தம் செய்த எள்ளை, வெறும் கடாயில் போட்டு நன்கு வறுத்துப் பொடிக்கவும். வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி பாகு காய்ச்சவும். தூளாக்கிய எள்ளுப் பொடியை, அதனுடன் கலந்து சுருளக் கிளறவும். பூரணம் ரெடி!
தயார் செய்து வைத்துள்ள மேல் மாவை எடுத்து, கிண்ணம் போல் செய்து அதனுள்ளே எள்ளு பூரணத்தை வைத்து மூடி, ஆவியில் வேக விட்டு எடுத்தால் எள் கொழுக்கட்டை தயார்.

தேவையானவை - மேல் மாவுக்கு: பச்சரிசி மாவு - 2 கப், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
பூரணத்துக்கு: தேங்காய் துருவல், பொடித்த வெல்லம் - தலா 2 கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.
செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீரை விட்டு கொதிக்க விடவும். அதில்... உப்பு, நல்லெண்ணெய் சேர்க்கவும். கொதிக்கும்போதே, மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தூவி, கட்டியில்லாமல் நன்கு கிளறவும். மாவு கெட்டியானதும் இறக்கி, 10 நிமிடம் ஈரத் துணியால் மூடி வைக்கவும்.
பொடித்த வெல்லத்தை தண்ணீரில் கரைத்து, வடிகட்டி பாகாகக் காய்ச்சவும். வாசனை வந்ததும், தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து சுருளக் கிளறவும். பூரணம் தயார்!
கொழுக்கட்டைக்குத் தயார் செய்து வைத்துள்ள மேல் மாவை எடுத்து, கிண்ணம் போல் செய்து அதனுள் பூரணத்தை வைத்து, உருண்டைகளாகப் பிடிக்கவும். இதேபோல் ஒவ்வொன்றையும் தயார் செய்து, ஆவியில் வேக வைத்து எடுக்க... மோதகம் ரெடி!

தேவையானவை - மேல் மாவுக்கு: பச்சரிசி மாவு - 2 கப், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
பூரணத்துக்கு: கடலைப்பருப்பு, வெல்லம் - தலா ஒரு கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.
செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீரை விட்டு கொதிக்க விடவும். அதில்... உப்பு, நல்லெண்ணெய் சேர்க்கவும். கொதிக்கும்போதே, மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தூவி, கட்டியில்லாமல் நன்கு கிளறவும். மாவு கெட்டியானதும் இறக்கி, 10 நிமிடம் ஈரத் துணியால் மூடி வைக்கவும்.
குக்கரில் கடலைப்பருப்பை வேக வைத்து, நன்கு மசித்துக் கொள்ளவும். வெல்லத்தைப் பொடித்து, தண்ணீரில் கரைத்து வடிகட்டவும். அந்தக் கரைசலை கொதிக்கவிட்டு, வேக வைத்த பருப்பை சேர்த்து சுருளக் கிளறி, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளற... பூரணம் ரெடி!
கைகளில் எண்ணெய் தடவிக் கொண்டு, தயார் செய்து வைத்துள்ள மேல் மாவிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக மாவை எடுத்து, சொப்பு போல செய்து கொள்ளவும். அதனுள்ளே பூரணத்தை வைத்து மூடவும். இதேபோல் ஒவ்வொன்றையும் தயார் செய்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.