|
| 'வந்தாரை வாழவைக்கும் தமிழகம்போல், வாழை வைத்தாரை வாழ வைக்கும் வாழை என வாயார வாழ்த்தி, சுபநிகழ்ச்சிகளுக்கு கட்டியிருக்கும் வாழை மரம் கட்டியம் கூறுவதுபோல், இக்கட்டுரைக்குள் புக, வாழைப்பூ போன்ற இரு கரம் கூப்பி அழைக்கின்றேன்.
மா, பலா, வாழை என முக்கனிகளுள் கடைசியாக இருந்தாலும் பலன்களை அள்ளித் தருவதில் முதலிடம் வாழைக்கே!
சுக்ரோஸ், ஃப்ருக்டோஸ், க்ளுகோஸ் என்ற மூன்று வகை சர்க்கரைச் சத்தும் நார்ச்சத்தும் சேர்ந்த வாழைப்பழம் விளையாட்டு வீரர்களுக்கு தேவையானது. பழம் சாப்பிட்ட சிறிது நேரத்தில் ட்ரைப்டோன் செரடோனின்களாக மாறி உற்சாகத்தை ஊட்டுகிறது. 11/2 மணி நேர உடற்பயிற்சிக்குத் தேவையான சக்தி வாழைப்பழம் தரும்.
மாதவிடாய் வருவதற்கு முன் வரும் பரீ மென்ஸ்ட்ரஸ் சின்ட்ரோம் உள்ளவர்கள் சாப்பிட்டால் ஙி6 விட்டமின் ரத்தத்தில் குளுகோஸ் அளவை அதிகப்படுத்தி எரிச்சல் இன்றி சாந்தடையச் செய்யும்.
இதில் உள்ள இரும்புச்சத்து இரத்தசோகையை நீக்குகிறது. பொட்டாசியம் ஹைப்பர் டென்ஷனைக் குறைக்கிறது . மூளையை சுறுசுறுப்பாக்கி புத்தியை கூர்மையாக்குகிறது.
நெஞ்சு எரிச்சல் குறையும் மலச்சிக்கல் தீரும். உணவுக்கிடையே இரண்டு பழம் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக்கி பசி உணர்வை ஏற்படாமல் செய்கிறது.
நரம்புத் தளர்ச்சி ஏற்படாது. ஸ்ட்ரோக்கை தடுக்கலாம். படபடப்பின்றி அமைதியாக பேச நடந்து கொள்ள உதவுகிறது.
பூவன், பேயன், ரஸ்தாலி, மலை வாழைப்பழம், செவ்வாழை, கற்பூர வாழை, மோரீஸ் என பல வகைகள் உண்டு.
பேயன் வாழைப் பழத்தை அம்மை போட்டவர்களுக்கு கொடுத்து சூட்டை வெக்கையை தணிப்பார்கள். ரஸ்தாளிப்பழம் மலச்சிக்கல் உள்ளவர்கள் சாப்பிட ஏற்றதல்ல. பூவன் பழம் மலச்சிக்கலைப் போக்கும். செவ்வாழைப் பழம் சாப்பிட்டால் ரத்த விருத்தியாகும். மலைவாழைப்பழம் முதியவர்களுக்கு ஏற்றது. எளிதில் ஜீரணமாகும். கற்பூரவள்ளி சுவைமிகுந்தது. மோரீஸ் குளிர்ச்சியானது. பேயன் பழம் ருசியானது. வாழை மரம் படித்ததில்லை; கனி கொடுக்க மறந்ததா? என கண்ணதாசன் பாடியது இந்த வகைக் கனிகளைத்தானா? |
|
0 comments:
Post a Comment