B.P. உள்ளவர்களுக்கு

ரபரப்பு-நவீனகால அகராதியில் முதல் சொல். பாராட்டுதலுக்காக ஏங்கும் மனிதமனத்துக்குத் பெரும்பாலும் குழந்தைப்பருவத்தைத் தாண்டியதும் அது கிடைப்பதில்லை.
மாய்ந்து மாய்ந்து உழைக்கும் ஒருவருக்கு‘இந்தா பிடிங்க பத்மபூஷண்’ என கொடுக்க வேண்டாம். ‘‘அட! பரவாயில்லையே. அசத்திட்டியேப்பா!’’ என்ற குறைந்தபட்ச அங்கீகாரம் கூட கிடைக்காத போது பெருகும் சோர்வு. மன அழுத்தமாய் மாறி அது இரத்தக் கொதிப்பாய்க் குத்தவைக்கும்.  இயல்பாய் 120/80 என இருக்க வேண்டிய இரத்தக் கொதிப்பிற்கு வயதாகும் போது கொடுக்கப்படும் அதிகபட்ச சலுகை 140/90. இதில் மேலே சொல்லப்படும் 140 என்பது இதயம் சுருங்கும் போது உள்ள இரத்த அழுத்தம், 90 என்பது இதயம் விரிவடையும் போது வரும் இரத்த அழுத்தம்.இதயம் விரியும் போதும் இரத்த அழுத்தம் உயர்ந்தால், அதாவது 90-ஐத் தாண்டி 100-110 என அறிவித்தால். ஆபத்து என்பதை உணர வேண்டும். மேல் கணக்கு 140-ஐத் தாண்டும் போது அதற்கான உணவும் மருந்தும் மிக அவசியம்.

சரி எப்படி நமக்கு இரத்தக் கொதிப்பு கூடுகிறது என்பதை அறிந்து கொள்வது? சிலருக்கு காலைவேளைத் தலைவலி,தலைசுற்றல், உட்கார்ந்து எழும் போது லேசான தள்ளாட்டம். ஒரு விதமாய் உடல், கை, கால்களில் ஏற்படும் மதமதப்பு என அறிகுறிகளை காட்டலாம். பல நேரங்களில் அது மணிரத்னம் திரைப்படம் போல அதிகம் பேசாமல் அமைதியாகவும் ஆட்டிப்படைத்துவிடும்.

அப்பா, அம்மாவுக்கு பிரஷர் இருந்தால்.... இரத்தத்தில் சர்க்கரை நோய் இருந்தால்... மன அழுத்தம் நிறைந்த வாழ்விருந்தால்.... சரியான தூக்கம் இல்லாது இருந்தால்.... சிறுநீரக இயக்கம் சரியாக இல்லாதிருந்தால்.... இரத்தக் கொதிப்பு ஏற்படலாம். 40 வயதைக் கடந்த எவரும் ‘குடும்ப டாக்டரிடம் ஆறு மாதத்திற்கு ஒரு முறை இரத்தக் கொதிப்பை பார்த்துக் கொள்வது மிக மிக அவசியம். அதிக கட்டுப்படாத சரியாக மருத்துவம் செய்யப்படாத கவனிக்கப்படாத இரத்தக் கொதிப்புதான் மாரடைப்பிற்கு முதல் காரணம்.

அதிக உப்பு ரொம்பத் தப்பு.இயல்பாகவே பல காய்கறிகளில் நமக்குத் தேவையான உப்புச் சத்து அதிகம் உள்ளது. அதைத் தாண்டிய தேவைக்கு மிகச் சிறிய அளவு மட்டும் உப்பு போதுமானது.அதுவும் இரத்தக் கொதிப்பு உள்ளதென்றால், உப்பை மறப்பது நல்லது.

சரி...பாரம்பரியச் சொத்தாக பாட்டியின் காதிலிருந்த பாம்படம் கிடைக்கவில்லை. பாட்டன் வச்சிருந்த பி.பி. மட்டும் வந்திடுச்சு. என்ன சாப்பிடலாம்? தினசரி காலை வேளையில முருங்கைக்கீரையும், சிறிய வெங்காயமும் சேர்த்து சூப்பாக்கிச் சாப்பிடுங்கள். மதிய உணவில் 5-10 பூண்டுப்பற்கள், தினசரி 50 கிராமிற்கு குறையாமல் சிறிய வெங்காயம் சேர்த்துக் கொள்ளுங்கள். சிறுநீரை அதிகரிக்கும் அத்தனை உணவுகளும் இரத்தக் கொதிப்பைக் குறைக்கும். வாழைத் தண்டு, வாழைப்பூ, சுரைக்காய், பீர்க்கங்காய், பார்லி ஆகியன அடிக்கடி உணவில் இருப்பது அவசியம். உணவில் எண்ணெய் குறைவாக இருப்பதும்,புலால் உணவை கூடிய மட்டும் தவிர்ப்பதும் நல்லது. ரொம்ப விருப்பப்பட்டால், பொரிக்காத வேகவைத்த மீன் வாரம் ஓரிருமுறை சேர்க்கலாம்.

சீரகம் ரத்தக் கொதிப்பைக் குறைக்கக் கூடியது.நல்ல மணமுள்ள சீரகத்தை எடுத்து வந்து, லேசாய் வறுத்து அதனை மூன்று நாள் இஞ்சிச் சாறிலும், மூன்று நாள் எலுமிச்சை சாறிலும், இன்னும் மூன்று நாள் கரும்புச்சாறிலும் ஊற வைத்து உலர்த்தி எடுங்கள். நன்கு உலர்ந்ததும் மிக்ஸியில் பொடி செய்து வைத்துக் கொண்டு தினசரி காலை மாலை ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வாருங்கள். ‘நாங்க இன்ஸ்டெண்ட் விரும்பி’ என்கிறீர்களா? அருகாமை சித்த மருத்துவரை அணுகுங்கள். சீரகச் சூரணமாய் இது தயார் நிலையில் கிடைக்கும். அதே போல் வெந்தயம் தினசரி பொடி செய்து சாப்பிட,இரத்தக் கொதிப்பிற்கு காரணமாக கொழுப்போ அல்லது கொழுப்பின் வகையான ட்ரைகிளைசரைடு இருப்பின் அதனைக் குறைக்க உதவிடும்.

வெள்ளைத்தாமரை தமிழரின் தமிழ் மருத்துவத்தின் ஒரு ஒப்பற்ற கண்டுபிடிப்பு. அதன் பூவிதழை உலர்த்தி பொடி செய்து நீராகவோ அல்லது நேரடி பொடியாகவோ சாப்பிடுவது இரத்தக் கொதிப்புக்கு சிறப்பான உணவு. அதே போல்  மருதமரப் பட்டை இரத்தக் கொதிப்பைக் குறைக்க உதவுவதுடன், மாரடைப்பைத் தடுக்கும் என்று உலகளாவிய ஆய்வுகள் உறுதிப்படுத்தி வருகின்றன.

இரத்தக் கொதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுவிட்டால்,சரியான இடைவெளியில் அதன் அளவைத் தெரிந்து கட்டுக்குள் உள்ளதா என்பதை குடும்ப மருத்துவரிடம் தெரிந்து கொள்வது ரொம்ப முக்கியம். மருத்துவர் பரிந்துரைக்காமல் மருந்தை நிறுத்துவதோ, மாற்றுவதோ கூடாது.

மனம் விட்டுச் சிரிப்பதும் குதூகலப்படுவதும் அடிக்கடி நிகழ வேண்டும்.  சின்னதாய் நடனமோ, சிலிர்ப்பூட்டும் அரவணைப்போ, நினைத்து நினைத்து மகிழ வைக்கும் நகைச்சுவையோ ஏதோ ஒன்றிற்காகக் கொஞ்சம் தினசரி மெனக்கெடுங்கள்.அவைதரும் மகிழ்ச்சி இதயம் வரை எட்டிப்பார்த்து ரத்தக்கொதிப்பைக் கட்டாயம் குறைக்கும்.

2 ஆழாக்கு முருங்கைக் கீரையை உப்பு போட்ட தண்ணீரில் அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 3 பெரிய வெங்காயம், 4 பச்சை மிளகாய் இவற்றை பொடிப் பொடியாக நறுக்கி இரண்டையும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

லு லிட்டர் தண்ணீரை உப்பு போட்டு கொதிக்க விடவும்.இதில் ஒரு ஆழாக்கு அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து சரியான முறையில் கிளறவும். இதே கரைசலில் முருங்கைக்கீரையையும் சேர்த்து கிளறிக்கொண்டே வரவேண்டும்.கூழ் பதத்திற்கு இந்த கரைசல் வரும் வரை கிளற வேண்டும்.பின்னர் அரை டீஸ்பூன் பெருங்காயத் தூளை போட்டு சிறு சிறு உருண்டைகளாக்கிக் கொள்ளவும்.

வாழை இலை அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் எண்ணெய் தடவி இந்த உருண்டைகளை அடைகளாகத் தட்டி தோசைக்கல்லில் போட்டு இரு புறமும் வேகவிடவும்.

200 கிராம் சின்ன வெங்காயத்தை தோல் உரித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதன் மேல் துணியைக் (நீரில் படாமல்) கட்டி வெங்காயத்தை நீராவியில் வேக விடவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள், கால் டீஸ்பூன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, வேகவைத்துள்ள வெங்காயத்தையும் சேர்த்து வதக்க வெங்காய மசாலா ரெடி!


ஒரு கப்  வாழைப்பூவை சுத்தம் செய்து வேகவைத்துக் கொள்ளவும். லு கப் கடலைப்பருப்பை ஊறவைத்து அரைத்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயம், கால் டீஸ்பூன் இஞ்சி, பூண்டு பேஸ்ட், நறுக்கிய 2 பச்சை மிளகாய், உப்பு இவையனைத்தையும் கடலைப்பருப்பு, வாழைப்பூவுடன் சேர்த்துக் கொள்ளவும். தேவையெனில் பெருங்காயத்தூள் சிறிதளவு சேர்த்து சிறுசிறு உருண்டைகளாக்கிக் கொண்டு இட்லிப் பாத்திரத்தில் வேக வைத்து எடுக்கவும்.

(ஆவியில் வேக வைத்து எடுப்பதால் B.P. உள்ளவர்களுக்கு நல்ல ஆரோகியமான உணவு.)





* வெங்காயம்

* பூண்டு

* வாழைத்தண்டு

* வாழைப்பூ

* சுரைக்காய்

* பீர்க்கங்காய்

* பார்லி

* சீரகம்

* வெந்தயம்

* பொரிக்காத வேகவைத்த மீன்

* வெள்ளைத்தாமரை

* மருதமரப் பட்டை

* மனம் விட்டுச் சிரிப்பது

0 comments:

Post a Comment