NAGARAJI B

ன்றைய இந்தியர்கள் சராசரியாக 65 ஆண்டுகள் வாழ்கின்றனர். இனிமேல் இந்தியர்களின் சராசரி வயது 100 ஆக இருக்கும். இதே நேரத்தில் முதுமைத் தோற்றத்தால் தளர்ச்சியடையாமல், நோய்கள் எதுவுமின்றி அறிவுக் கூர்மையுடனே தரமான வாழ்வை 100 ஆண்டுகள் வரை சராசரியாக வாழலாம். கவிஞர் வைரமுத்து, `நான் 150 ஆண்டுகள் வரை வாழ்வேன். இதற்கு ஏற்ப என் உடல்நலனைப் பாதுகாத்து வருகிறேன்' என்று ஒருமுறை சொன்னார். இது, 2000 ஆண்டிற்குப் பிறகு பிறந்த குழந்தைகளுக்கும் சாத்தியமே!

ஜார்ஜ் எஸ்.ரூத் என்ற அமெரிக்கரே இந்த உண்மைகளைக் கண்டுபிடித்துள்ளார். இவர் அமெரிக்க தேசிய முதுமையியல் ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஆவார்.

அதிக ஆண்டுகள் வாழ விரும்பினால் நீங்கள் இப்போதும் சாப்பிடும் உணவில் 25 முதல் 40 சதவிகிதமே உண்ண வேண்டும். 1800 கலோரி என்றால் இதில் 1350 கலோரியைத் தவிர்க்க வேண்டும். இதனால் விரைந்து ஒல்லியாக மாறுவீர்கள். உணவைக் குறைவாக எடுத்துக் கொள்வதால் முதுமை அடைவது தாமதப்படுத்தப்படுகிறது.

எலிகளுக்கு குறைந்த அளவே கலோரி உணவு கொடுக்கப்பட்டபோது, சில எலிகளுக்கு மட்டுமே குறைந்த அளவு புற்றுநோய் அபாய அறிகுறி தெரிந்தது. ஆனால் இந்த எலிகள் குண்டாகவோ, நீரிழிவு நோய் அபாயமோ என எதுவும் இன்றி ஆரோக்கியமாக இருந்தன. இதே முறைதான் மனிதர்களுக்கும்!

கூடுதலாகச் சாப்பிட்டால் உடல் பருமனாகி பெருங்குடல் புற்று நோயும், நீரிழிவு நோயும் கண்டிப்பாக உருவாகும். பெண்களுக்கு மார்பகப் புற்றுநோயும் உண்டாகும் என்கிறார் இன்னொரு அமெரிக்க ஆராய்ச்சியாளரான எரிக் ரவ்ஸியன் என்பவர்.

நீங்கள் இப்போது உண்பதில் 25 முதல் 40 சதவீதமே தினமும் உண்பது என்பது எளிதான காரியம் அல்ல. இதற்காக நீங்கள் சாப்பிடும் உணவு மிகவும் சத்துள்ள உணவுகளாக இருக்க வேண்டும் என்கிறார் இவர்.

சர்க்கரையும், கொழுப்பும் குறைவாக உள்ள சத்துணவு தேவை. குறிப்பாக, மதிய உணவில் அல்லது காலை உணவில் இரண்டு ரொட்டி (சப்பாத்தி) அல்லது ஒன்றரை கோப்பை கைக் குத்தல் அரிசி, ஒரு கப் பாசிப் பருப்பு கூட்டு அல்லது காராமணி சுண்டல், ஆவியில் வேக வைக்கப்பட்ட காய்கறிகள், கீரை சாலட், பழசாலட், தயிர் ஏதேனும் ஒரு பழம். இதுவே ஒரு நாளைக்கான உணவு. இரண்டு வேளை இதே முறையில் சாப்பிட்டு வரவேண்டும்.

அசைவ உணவுக்காரர்கள் அவித்த காய்கறிகளுடன் முப்பது கிராம் மட்டுமே கோழி அல்லது மீனை வறுக்காமல் குழம்பு வடிவில் சாப்பிட வேண்டும். ஆனால், பாசிப்பருப்பு, சுண்டல், தயிர் போன்றவற்றில் தலா அரை கோப்பை மட்டுமே சேர்த்துக் கொள்ளலாம்.

உடல் நலம் ஆரோக்கியமாக இருப்பவர்கள் இதே முறையில் மிகவும் குறைவாகச் சாப்பிட்டு வந்தால் போதும். நோய்களுக்காக மருந்து மாத்திரை சாப்பிடுகிறவர்கள் உங்கள் மருத்துவர் மற்றும் சத்துணவு நிபுணர் உதவியுடன் சாப்பிடும் அளவைக் குறைக்கலாம்.

கலோரி அளவைக் கணக்கிட்டுச் சாப்பிடுவதால் பசி அதிகரிக்குமே. இதைத் தவிர்க்கவும் ஒரு வழி சொல்கின்றனர். ஒருவேளை மட்டும் திராட்சைச் சாறு ஒரு டம்ளர் அருந்தலாம். சர்க்கரை சேர்க்காமல் மிக்ஸியில் சாறாக்கி அருந்த வேண்டும். இதனால் பசியின்மை இன்றியே சக்தியுடன் வாழலாம்.

திருமணம் செய்து கொள்வது, பால்ய நண்பர்களின் உறவைப் புதுப்பித்து வருவது, நாய் ஒன்றைச் செல்லமாக வளர்த்து வருவது, இவை எல்லாம் மன இறுக்கம், இரத்தக் கொதிப்பு முதலியவற்றைக் குறைக்கின்றன. மாரடைப்பு வந்து மீண்டவர்கள் கூடுதலாக ஏழு ஆண்டுகள் வாழவும் உதவி செய்கின்றன.

நோயாளியாக இருந்தாலும் நீண்ட நாள் வாழ இவற்றுடன் தினமும் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி தேவை. காலை, மதியம், மாலை என பத்து பத்து நிமிடங்கள் இவற்றைச் செய்து வந்தால் போதும்.

அதிக ஆண்டுகள் உறுதியாக, நலமுடன், அறிவுக் கூர்மையுடன் வாழ முதல் கட்டமாக உணவைக் குறைத்து உண்ண ஆரம்பித்தால் போதும். மற்றவை தானாக வந்துவிடும்.

0 comments:

Post a Comment