NAGARAJI>B

நீங்கள் எந்த வயதுக்காரர் என்றாலும் சரி, பளபளப்பான தோலுடன்தான் காட்சியளிக்க வேண்டும். பளபளப்பான தோல் அழகான தோல் மட்டுமல்ல. ஆரோக்கியமான தோலும்கூட.

சுவீடனில்தான் எழுபதும் அதற்கும் மேற்பட்ட வயதுக்காரர்கள் மிகக் குறைந்த அளவிலேயே தோல் சுருக்கங்களுடன் காணப்படுகின்றனர். இதற்காக சுவீடன் நாட்டைச் சேர்ந்த நான்கு வகை இனத்தவர்களின் உணவு முறையை ஆராய்ந்தனர். தோல் சுருக்கம் இன்றி முதுமையிலும் இளமையான பளபளப்பான தோலுடன் காட்சியளிக்க இவர்கள் உணவில் ஐந்தில் மூன்று பங்கு பழங்கள், காய்கறிகள் அதிகம் இருப்பதே. இத்துடன் ஆலிவ் எண்ணெய், பயறு வகை போன்றவற்றைச் சேர்ப்பதுதான் என்று கண்டுபிடித்துள்ளனர்.

இனிப்பு சம்பந்தமான உணவுகளைக் குறைவாகச் சாப்பிடுகிறவர்களும் தோல் சுருக்கமின்றி வாழ்கின்றனர். புரதம், வைட்டமின் போன்றவையும் இளமைத்துடிப்புள்ள பளபளப்பான தோலைத் தருவதை உறுதி செய்துள்ளனர்.

சரி, நாம் என்ன செய்வது?

கைக்குத்தல் அரிசி, தவிடு நீக்காத கோதுமை, உட்பட தானியங்கள் தான் தோலைப் பாதுகாக்கின்றன. பழங்கள், காய்கறிகள் மூலம் கிடைக்கும் நார்ச்சத்து குடல் பகுதியை நன்கு சுத்தம் செய்து உடலில் உள்ள நச்சுப் பொருள்களை வெளியேற்றிவிடுகிறது. சோயாமொச்சை தயிர், முட்டை, கோழி, மீன் போன்றவற்றின் மூலம் தரமான புரதம் கிடைக்கிறது. புரதம் திசுக்களை நன்கு பராமரிக்கிறது.

மீன், ஆலிவ் எண்ணெய் மூலம் கிடைக்கும் சத்துகள் ஃப்ரீராடிக்கல் திரவத்தைக் கட்டுப்படுத்தி தோலின் செல்களைப் பாதுகாக்கிறது.

ஃப்ரீராடிக்கல் திரவத்தைக் கட்டுப்படுத்தும் விதத்தில் நமது உணவு முறை தொடர வேண்டும். காரட், பறங்கிக்காய், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, மாம்பழம், அப்ரிகாட், பீச், பசலைக்கீரை உட்பட எல்லாவிதமான கீரைவகையும் இவை சூரியனாலும் சுற்றுப்புறச் சூழ்நிலையாலும் தோல் கெட்டுப்போவதையும், வறண்டு போவதையும் தடுக்கிறது.

அடுத்து வைட்டமின் சி நிறைந்த ஆப்பிள், ஆரஞ்சு, நெல்லிக்காய், கொய்யா, பப்பாளி, அன்னாசி ஆகிய பழங்களையும், வறமிளகாய், பச்சை மிளகாய் போன்றவற்றையும் உணவில் சேர்க்க வேண்டும் இது தோலைப் பாதுகாக்கும் முக்கியமான கொலாஜன் என்ற பொருளை உருவாக்கி சுருக்கம் விழுந்து விடாமல் பாதுகாக்கும்.

அடுத்து வைட்டமின் ஈ நிறைந்த சூரியகாந்தி விதைகள், சூரியகாந்தி எண்ணெய், சோயாமொச்சை போன்றவற்றை உணவில் சேர்க்க வேண்டும். முகப்பரு தொடர்ந்து இருந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி வைட்டமின் ஈ (200 சர்வதேச யூனிட்டுகள்) மாத்திரை சாப்பிடலாம். செல்களின் சவ்வுப்பகுதியை வைட்டமின் ஈ பாதுகாக்கிறது.

வறண்ட தோலை முட்டை, ஓட்ஸ், வாழைப்பழம், சாதம் போன்றவற்றில் தாராளமாக உள்ள பயோட்டின் உப்பு பாதுகாக்கிறது. வறண்ட முடி உள்ளவர்களும் இந்த உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

தோலின் ஒவ்வொரு திசுவையும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து வைத்திருப்பது சிலிக்கான் உப்புதான். தோலில் சுருக்கம் விழ ஆரம்பிப்பது புண்கள் ஆறத் தாமதமாவது, சிலிகான் குறைபாடே. வெள்ளரிக்காய், ஸ்ட்ராபெர்ரி, முருங்கைக்காய் சிலிகான் குறைபாட்டை சரி செய்யும்.

திசுக்களில் தொய்வு ஏற்பட்டுவிடாமல் பாதுகாத்து தோலைப் பளபளப்பாக மாற்றுவது பூண்டு. வஞ்சிரமீன், காளான், கோதுமைரொட்டி ஆகியவற்றில் தாராளமாக உள்ள செலினியம் உப்பே!

இத்துடன் ஒன்றரை முதல் மூன்று லிட்டர் குடி தண்ணீர் அருந்தவும். இதனால் உடலில் உள்ள நச்சுப் பொருள்கள் நீங்கி முகத்தில் பருக்கள் இன்றி பளபளப்பாகவும் காட்சியளிக்கலாம்.

உணவாகச் சாப்பிடப்படும் இந்த உணவுகள் எல்லாம் மருந்து போலச் செயல்பட்டு பளபளப்பான அழகான தோலை அனைத்து வயதினருக்கும் தரும் என்பது உறுதி.

0 comments:

Post a Comment