Herbal ...food

01.12.09 தொடர்கள்
த்தனை அழகாக இருந்தாலும், இளமையாக இருந்தாலும், அதையெல்லாம் மீறி ஒருவருக்கு கவர்ச்சி அளிப்பதில் முதல் பங்கை அளிப்பது கண்கள்தாம். சோர்ந்து போய் `டல்'லடிக்கும் கண்களால் யாரைக் கவர முடியும்?

போதிய உறக்கம் இன்மை... வைட்டமின் மற்றும் மினரல் சத்து இல்லாத மாவுச் சத்து மற்றும் கொழுப்புச் சத்து மட்டுமே நிறைந்த உணவை உள்ளே தள்ளி, நேரம் கெட்ட நேரத்தில் உறங்கச் செல்லுவது... நாள் முழுக்க கம்ப்யூட்டர் முன்னே கண்களை மேயவிடுவது... கணக்கு வழக்கு இல்லாமல் டிவியைப் பார்ப்பது... எக்கச்சக்கமாக சினிமா பார்ப்பது... போதிய வெளிச்சம் இல்லாத நிலையில்... அதுவும் குறிப்பாக படுத்துக் கொண்டு படிப்பது....

இது போன்ற செயல்களால் `மசமசத்த' பார்வை... மங்கிய விழிகள்.... கண்களில் நீர் வடிதல்... போன்ற குறைபாடுகள்...

அடுத்து `சோடா பாட்டில்' கண்ணாடி... நவீன முறையில் என்றால் லேசர் அறுவை சிகிச்சை.

மெல்லிய கண்ணாடி... இத்யாதி...

முன்பெல்லாம் வயதானவர்கள்தான் பார்வை குறைபாட்டுக்கு கண்ணாடி அணிந்தார்கள். ஆனால் தற்போது எல்.கே.ஜி. குழந்தைகள் முதல் கண்ணாடி அணிந்து பவனி வருகிறார்கள்.

என்ன கொடுமை?

இள வயது முதலேயே சரியான ஊட்டமான உணவை உட்கொள்ள வைத்தால் கண்ணாடியையும் தவிர்க்கலாம்... ஒளி மிகுந்த அழகான கண்களையும் பெறலாம்.

எளிதான உணவு முறைகளைப் பார்க்கலாமா?

கறிவேப்பிலை... கறிவேப்பிலை.... என்றொரு அரும் மூலிகை நம் கையருகே கிடைக்கிறது.

ஆனால் பெரும்பாலானோர் அதை முதல் வேலையாக சாப்பாட்டுத் தட்டில் இருந்து எடுத்து கீழே போடுவதையே செய்கின்றனர்.

கறிவேப்பிலையின் மகத்துவத்தை உணர்ந்த பெரியோர்கள் அதை தினசரி உணவில் கொஞ்சமேனும் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே அதை சாம்பார், ரசம், பொரியல் என்று சேர்க்கத் தொடங்கினார்கள். வெறும் வாசனை கூட்டும் வஸ்துவாக அன்று...

கறிவேப்பிலையை பயன்படுத்தி மிகவும் சுவையான பண்டங்களைத் தயாரிக்கலாமே...

அத்தி கறிவேப்பிலை ஜூஸ்

அத்தி.... Botanical name..... Ficus carica

Family.... Moraceae

கறிவேப்பிலை

Botanical Name: Murraya koenigii

Family: Rutaceae

தேவை

உலர் அத்திப் பழம்....5

பச்சை கறிவேப்பிலை இலைகள் ..... 10

தேங்காய்ப் பால் ....1 கப்

வெல்லக் கரைசல் .... 2 மேஜைக்கரண்டி

ஜாதிக்காய்ப் பொடி...1 சிட்டிகை

செய்முறை: அத்திப்பழத்தை சிறிது தண்ணீரில் பத்து நிமிடம் ஊற வைக்கவும். உலர்ந்த கறிவேப்பிலை வேண்டாம்.... மாறாக பச்சை கறிவேப்பிலையை இரண்டாகக் கிள்ளி அதை அத்திப்பழம் ஊற வைத்த தண்ணீரில் சேர்க்கவும். இதை மிக்சியில் மைய அரைக்கவும். இத்துடன் வெல்லக் கரைசல், தேங்காய்ப் பால் மற்றும் ஜாதிக்காய்ப் பொடி ஆகியவற்றைச் சேர்த்து சுவைக்கவும்.

என்ன பயன்?

அத்தி.... வைட்டமின் ஏ செறிந்தது

கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், காப்பர் போன்ற அரிய தாதுக்கள் உடையது இரத்த விருத்தி செய்யும் அத்தி, குறிப்பாக பெண்களுக்கு மிகவும் பயனுள்ளது. வயிற்றைச் சுத்தமாக்கி உடலை `கலகல'வென்று வைக்கும் திறன் உடையது. வறட்டு இருமல், வாய்ப்புண், வயிற்றுப்புண் ஆகியவற்றுக்கு நல்ல தீர்வு. சத்து இழந்த உணர்வு உள்ள போது அத்தி சுறுசுறுப்பை அளிக்க வல்லது.

கறிவேப்பிலை... வைட்டமின் `ஏ' மற்றும் வைட்டமின் `சி', இரும்புச் சத்து, பாஸ்பரஸ், கால்சியம் போன்றவை மிகுந்த கறிவேப்பிலை இளமைக்கு உத்தரவாதம். கண் பார்வைக் குறைவு, கண் பொறை போன்ற குறைபாடு, வாந்தி வருவது போன்ற உணர்வு, பித்தம், வயிற்றுப்போக்கு, வயிற்று உப்புசம், இள நரை போன்றவைகளை நீக்கி பளிச்சிடும் கண்கள், கருங் கூந்தல் ஆகியவற்றை அளிக்க வல்லது கறிவேப்பிலை.

தேங்காய்ப் பாலுடன் சேரும் போது வயிற்று உபாதைகளைக் குறைத்து, இளமைத் தோற்றம் அளிக்கும் சுவையான பானமாக கிடைக்கிறது.

திடீர் பானம்

தேவை

கறிவேப்பிலை விழுது....1 தேக்கரண்டி

மோர்....1 கப்

உப்பு .... ருசிக்கேற்ப

செய்முறை :கறிவேப்பிலையை சிறிது நீர் சேர்த்து விழுதாக அரைக்கவும். புளிப்பில்லாத மோரில் இதைச் சேர்த்து, உப்பு கூட்டி கலக்கி சுவைக்கவும்.

என்ன பயன்?

வயிற்றில் `கடா முடா' சத்தம் அடங்கும். நல்ல ஜீரணம் உண்டாகும். வாய்வு பிரச்சனைக்கு டாட்டா.

சீமைப் பொன்னாங்கண்ணி கூட்டு

உணவு வகைகள்... அதுவும் குறிப்பாக கீரை வகைகளின் சத்து முழுக்க முழுக்க நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் அது கூட்டு வகையில்தான். ஆவியில் வேக வைத்தது. அல்லது கூட்டு போன்ற வகையில் பருப்பு சேர்த்து... அதுவும் பாசிப்பருப்பு சேர்த்த கூட்டு என்றால் சுவையும் கூடி, சத்தும் மிகுந்த பண்டமாக இருக்கும்.

தேவை:

சீமைப் பொன்னாங்கண்ணி கீரை.... 1 கப்,

பாசிப் பருப்பு.... கால் கப்,

தக்காளித் துண்டங்கள்... அரை கப்,

வெங்காயத் துண்டங்கள் ... அரை கப்,

பச்சை மிளகாய்...3

தேங்காய்த் துருவல்...1 மேஜைக் கரண்டி,

மஞ்சள் பொடி.... கால் தேக்கரண்டி,

சீரகம் ... அரை தேக்கரண்டி,

சமையல் எண்ணெய் .... 1 மேஜைக் கரண்டி,

கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் ... தாளிதம் செய்ய

செய்முறை: இளம் கீரையை காம்பு இல்லாமல் வெறும் இலைகளை மட்டும் ஆய்ந்து நன்கு கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.

பாசிப்பருப்பை குழைய வேக வைத்து எடுக்கவும்.

வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி அதில் வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் ஒன்று, போட்டு வதக்கி அதனுடன் தக்காளியைச் சேர்த்து ஒரு சிட்டிகை உப்பு கூட்டி வதக்கி அதோடு கீரையைச் சேர்த்து சிறிது நீர் சேர்த்து மஞ்சள் பொடியையும் கூட்டி வேக விடவும்.

வெந்த பிறகு அதோடு பாசிப்பருப்பைச் சேர்க்கவும். தேங்காய்த் துருவல், 2 பச்சை மிளகாய் மற்றும் சீரகம் சேர்த்து மிக்சியில் விழுவதாக அரைத்து கீரையுடன் சேர்த்து ஒரு கொதிவந்தவுடன், தாளிதம் செய்து இறக்கவும்.

சிவப்பு வண்ண சீமைப் பொன்னாங்கண்ணியை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ருசித்தால் கண்களுக்கு பளபளப்பும், தோலுக்கு மினுமினுப்பும் மிஞ்சுமே.

என்னது? கண்களைப் பற்றி பேசிவிட்டு கேரட்டைப் பற்றி சொல்லாமல் போவதா?

இதோ ஒரு இனிமையான ரெசிபி!

காரட் பாயாசம்

தேவை :

காரட் துருவல் ... 1 கப்,

பால் ... 2 கப்,

தேங்காய்த் துருவல்.... கால் கப்,

வெல்லக் கரைசல்... முக்கால் கப்,

நெய்யில் வறுத்த முந்திரி ... 10 மற்றும் திராட்சை 6

செய்முறை :

அடி கனமான பாத்திரத்தில் பாலை எடுத்து அதில் கேரட் துருவலைச் சேர்த்து மெல்லிய தீயில் வேக வைக்கவும்.

இதோடு வெல்லக் கரைசலைச் சேர்த்து கொதிக்க விடவும். கடைசியாக தேங்காய்த் துருவல் மற்றும் முந்திரி, திராட்சையை சேர்த்து இறக்கவும். சுவைக்கவும்.

என்ன பயன்?

கண்களுக்கு சூப்பரான ஒரு டானிக் கேரட் வைட்டமின் `ஏ' செறிந்தது.

இது மட்டுமன்று...

முறையான சிறுநீரகச் செயல்பாடு, இடைவிடாத இருமல், வயிற்றுப்பொருமல் போன்ற குறைபாடுகளுக்கு அடிக்கடி கேரட்டை உணவில் சேர்க்கலாம். பச்சையாக கேரட் சாப்பிட முடியாதவர்களுக்கு அதை இட்லிப் பானையில் ஆவியில் வேக வைத்துக் கொடுக்கலாம். குறிப்பாக குழந்தைகள் இதை விரும்புவார்கள். பச்சை கேரட்டை மென்று சாப்பிட்டால் பற்களின் இடுக்கில் தங்கி இருக்கும் துணுக்குகளை நீக்கும்... ஸோ,நோ பல் வலி!

நார்ச் சத்து மிக்க கேரட் உணவுப் பாதையில் அடைப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ளும். இது மட்டும் இல்லை... கல்லீரலுக்கு டானிக் போன்றது இது.

பளபளக்கும் கண்கள், நல்ல ஆரோக்கியமான சுருக்கமல் இல்லாத தோல் மற்றும் நோய் வராமல் தடுக்கும் ஆற்றல் உள்ள உடம்பு... இவைகளுக்கு தினசரி கேரட் சாப்பிடலாமே....

சூப்பர் சூப் :

முருங்கைக் கீரை மற்றும் ஒரு மலிவான பண்டம்.

அதென்னவோ முருங்கைக் கீரை என்றால் முகம் சுளிப்பவர் பலர். காரணம் அதன் வாடை மற்றும் பொடியான இந்தக் கீரையை ஆய்வதற்கு ஆகும் அதிக நேரம்.

கொஞ்சம் மெனக்கெட்டால் அதிக பயனை அடையலாமே....

தேவை :

முருங்கைக் கீரை இலைகள்...2 மேஜைக் கரண்டி

பொடியாக நறுக்கிய சாம்பார் வெங்காயம்... கால் கப்,

கார்ன் ஃப்ளோர் .... 1 தேக்கரண்டி

மைதா மாவு ... 1 தேக்கரண்டி

தக்காளி சாஸ் ... 2 தேக்கரண்டி

வெண்ணெய்.... 1 மேஜைக்கரண்டி

உப்பு மற்றும் மிளகுப் பொடி ... ருசிக்கேற்ப

செய்முறை:

முருங்கைக் கீரையை ஒன்றிரண்டாக இடிக்கவும். இரண்டு கப் நீரை கொதிக்கவிட்டு அதில் இடித்த கீரையைப் போட்டு வேக விடவும். தண்ணீரை வடித்து தனியே வைக்கவும்.

வாணலியில் வெண்ணெயை உருக்கி அதில் மிகவும் பொடியாக நறுக்கிய சாம்பார் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும் அதோடு கீரை வெந்த நீரை சேர்த்து வேக விடவும்.

இதில் விழுதாகக் கரைத்த கார்ன் ஃப்ளோர் மற்றும் மைதா கலவையைச் சேர்த்து கொதிக்கவிடவும்.

வடிகட்டி உப்பு மற்றும் மிளகுப் பொடி சேர்த்து கலக்கி சுவைக்கவும்.

என்ன பயன்?
சகாய விலையில் சமர்த்தான கீரை... வைட்டமின்கள் ஏ, பி, மற்றும் சி நிறைந்தது. இரும்புச் சத்து மற்றும் கால்சியம் செறிந்தது. அனீமியா, ரத்தப் போக்கு உள்ளோர் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் சிறந்தது. வயிற்று உபாதைகள், அல்சர் உள்ளோருக்கும் மற்றும் ஆஸ்துமாவினால் அவதிப் படுவோருக்கும் நல்ல தீர்வை அளிக்கும் ஒரு எளிய சூப் இது. ஆரஞ்சு, ஆப்பிள், பால் போன்ற விலை அதிகமான பொருட்களை வாங்க இயலாத ஏழைகளுக்கும் ஒரு அரிய வரப்பிரசாதம் இந்த முருங்கை சூப்.

0 comments:

Post a Comment